பாதணிகளின் அழகும் ஆபத்துகளும்
எவ்வளவு தூரம் உயரமான பாதணிகளை உருவாக்க முடியுமோ அவ்வளவு உயரமாக குதிகால் பாதணிகளின் உயரத்தை அதிகரித்து அவற்றின் வடிவங்களில் பல மாற்றங்களை செய்து சந்தையில் விடுகின்றன நிறுவனங்கள்.
இந்தப் பாதணிகளை எவ்வளவு விலைக்கொடுத்தேனும் வாங்கி அணியக் கூடியவர்களாக நமது பெண்கள் மாறிப்போயுள்ளனர்.
உயரம் குறைந்தவர்களுக்கு இந்த பாதணிகளால் நன்மைதான். குள்ளமானவர்கள் இந்தப் பாதணிகளை அணிவார்களேயானால் அவர்கள் உயரமானவர்களாக தெரிவார்கள். குள்ளமானவர்களின் மனக்குறையை சற்று நீக்கும் ஒன்றாக இந்தப் பாதணிகள் விளங்குகின்றன.
இப்போது பெண்கள் சேலை அணிந்தால் கட்டாயம் குதிகால் பாதணிதான் அணிய வேண்டும், இல்லையென்றால் சேலைக்கு எடுப்பாக இருக்காது என்று கூறும் நிலை வந்துவிட்டது. அது மட்டுமல்ல, குட்டையான பாவாடைகளை அணியும் பெண்களும் இதனைதான் கடைப்பிடிக்கின்றார்கள்.
இதைவிட பெண்களின் அழகை இந்தப் பாதணிகள் மேலும் மெருகூட்டி காட்டுகின்றன.இவற்றைத்தவிர, இந்த பாதணிகளால் நன்மையிருப்பதாகத் தெரியவில்லை. நாகரீக மாற்றத்திற்கு ஏற்ப தங்களது தோற்றங்களிலும் மாற்றங்களை கொண்டு வரும் பெண்கள் மேலைத்தேய மோகத்தில் அதிகமாகவே ஈர்க்கப்பட்டுவிட்டனர்.
இவ்வாறான பொருட்களை அதிக விளைக்கொடுத்து வாங்குபவர்கள் பணத்தை கொடுத்து பொருட்களை மட்டும் வாங்கவில்லை. பொருளுடன் சேர்த்து உடல் நலக்கேடுகளையும் வாங்கிக்கொண்டு வருகின்றார்கள்.
இத்தகைய அதி உயரமான குதிகால் பாதணிகளை அணிவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. பாதணிகளை அணிவதால் வளைந்துப்போகிறது. இந்தப் பாதணிகள் இடுப்பு வலி, முதுகு கூன் விழுதல் கெண்டைக்கால் வலி, தலைச் சுற்று போன்ற உடலியல் நோய்களை ஏற்படுத்திவிடுகின்றன.நோய்களுக்கு அப்பால், இந்த பாதணிகளால் பாதுக்காப்பற்ற நடையையே நடக்க வேண்டியுள்ளது.
அதிக உயரமாக பாதணிகளை அணிந்துக்கொண்டு வீதியில் செல்லும் போது எமது இயல்பான நடையை மறந்து பாதுகாப்பாகவே ஒவ்வொரு அடியையும் எடுத்துவைக்க வேண்டும். கொஞ்சம் சறுக்கினாலும் கீழே விழவேண்டிய நிலைதான் ஏற்படும். எமது உடல் எடையை இந்த பாதணியின் கூரான முனைகளே தாங்கிக்கொண்டு இருக்கின்றன. இதனால் கொஞ்சம் பிசகினாலும் தசைப்பிடிப்பு ஏற்படலாம். அதைவிட வீதியில் விழவேண்டியும் ஏற்படும்.உயர் குருதியழுத்தம் போன்ற நோய்கள் உள்ளவர்கள் இவ்வாறான பாதணிகளை அணிவதை அறவே தவிர்த்து விடவேண்டும். இந்த பாதணிகள் உயிராபத்தைக் கூட ஏற்படுத்தக் கூடியதவைதான்.
இன்னும் சொல்லப்போனால் இந்தப் பாதணிகளை அணிந்துக்கொண்டு எந்தவித பயமும் இன்றி பளபளப்பான மேடையில் நடனமாடுபவர்களும் இருக்கவே செய்கின்றனர்.
இவ்வாறான பாதணிகளை தொடர்ந்து அணியாமல் குறிப்பிட்ட நிகழ்வுக்காக அணிந்தால் அது பெரிதளவான பாதிப்பை ஏற்படுத்தப்போவதில்லை.
ஆனால், தினமும் அதனையே அணியவிரும்புபவர்கள் கொஞ்சம் பணத்தை வைப்பிலிட்டு சேமித்துக்கொண்டாரல் எதிர்காலத்தில் வரப்போகும் நோய்களுக்கு செலவிடுவதற்கு இலகுவாக இருக்கும்.