இணைய வழி மோசடிகள் குறித்து 9 மாதங்களில் 8,000 முறைப்பாடு
வருடத்தின் கடந்த 9 மாதங்களில் இணைய வழி மோசடிகள் தொடர்பில் 8,000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழு தெரிவித்துள்ளது.
இணையத்தில் மேற்கொள்ளப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் பேஸ்புக் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்தக் குழு தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்தில் மாத்திரம் சுமார் 300 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இணையத்தின் ஊடாக பொதுமக்களின் நிதியைத் திட்டமிடப்பட்ட வகையில் மோசடி செய்யும் சம்பவங்கள் தொடர்பான பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இணைய வழி ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்ட 200க்கும் அதிகமான
வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வெளிநாட்டவர்கள்
இலங்கையிலிருந்து வெளிநாட்டில் உள்ள நபர்களிடமிருந்து நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரம் கைதான வெளிநாட்டவர்கள் சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகைதந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, தேசிய அடையாள அட்டைகள், பிறப்புச்சான்றிதழ்கள் மற்றும் பரீட்சை பெறுபேறுகளை இணையத்தளங்கள் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக வெளியிடுவது மோசடிகளுக்கு வழிவகுக்கும் என இலங்கை கணினி அவசர தயார் நிலைக் குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.