உதவி ஆசிரியர்களை ஆட்சேர்ப்புக்கான இடைக்கால தடை தொடர்ந்தும் நீடிப்பு
கடந்த அரசாங்கத்தின் போது பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பில் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி பதுளை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று (21) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த இடைக்காலத் தடை உத்தரவு 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான உதவி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை ஜூன் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும், தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படும் எனவும் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளரினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், தொழில் ரீதியான தொண்டர் ஆசிரியராக பணியாற்றும் தாம், உதவி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பித்ததாகவும், இலங்கை ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு முரணாக இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.