ஈரான் தூதுவரைத் தாக்கிய தொழிலதிபருக்கு விளக்கமறியல்
சனிக்கிழமை (19) மாலை கொழும்பு சிட்டி சென்டரில் (சிசிசி) கார் பார்க்கிங்கில் ஈரானிய தூதுவர் கலாநிதி அலிரேசா டெல்கோஷ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கொழும்பு 7 ஐச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 07, வார்ட் பிளேஸில் வசிக்கும் புவனேக மஹாசென் பஸ்நாயக்க (வயது 36) என்ற சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு சிட்டி சென்டர் வாகன தரிப்பிடத்தில் தனது வாகனத்தை நிறுத்த முற்பட்ட தூதுவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் வர்த்தகர், தூதுவரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர், தூதுவர் தனது வாகனத்தில் இருந்து இறங்கி, பொலிஸார் வரும் வரை காத்திருக்குமாறு சாரதிக்கு கூறியதுடன், அவரின் காரின் முன்புறத்தில் கையை வைத்து அழுத்தி வர்த்தகர் தப்பிச் செல்வதை தவிர்க்குமுகமாக செயற்பட்டுள்ளார்.
அதனைத் தாண்டியும் தொழிலதிபர் வலுக்கட்டாயமாக காரை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
அவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல உத்தரவிட்டுள்ளார்.