பெண்கள் மற்றும் சிறுவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் வகுக்கப்பட வேண்டும்
எமது நாட்டில் இந்த துரதிஷ்டவசமான, சூழ்நிலையில் குழந்தைகள், சிசுக்கள், தாய்மார்கள் மற்றும் பெண்களின் உரிமைகள் நாளுக்கு நாள் மீறப்படுவதைக் காணமுடிகிறது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்மலானை தேர்தல் தொகுதி கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘சுகாதார அமைச்சின் அறிக்கைகளின்படி, குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு குறித்த செய்திகள் நம்பிக்கை தருவதாக இல்லை.
எனவே, சிறுவர், பெண்களின் உரிமைகள் வலுவாக பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் உரிமைகள் அடிப்படை உரிமையாக பாதுகாக்கப்பட வேண்டும்
ஆரோக்கியமான சிறுவர் தலைமுறை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் ஒன்றாக அமைந்து காணப்படுகிறது.
தாய்மார்கள் மற்றும் பெண்களின் போசாக்கின்மை, சிசுக்களின் போசாக்கின்மை மற்றும் குழந்தைகளின் போசாக்கின்மை வளர்ச்சி ஆகியவை ஆரோக்கியமான தலைமுறை உருவாக்கத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஈஸ்டர் தாக்குதல், கொரோனா கோவிட் மற்றும் வங்குரோத்து ஆகிய மூன்று பாதிப்புகள் கடுமையான பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது.
இதனால், குழந்தைகள், சிசுக்கள், தாய்மார்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர், பெண்களின் உரிமைகள் கூட தொடர்ந்து மீறப்பட்டு வருகின்றன.
வீட்டில், வீதியில், வேலை செய்யும் இடங்களில் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். 52% பெண்கள் வன்முறையால் பாதிக்கப்படுவதால், தாய்மார்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களை மையமாக் கொண்ட புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றியின் பின்னர் பொருளாதார, சமூக, கலாச்சார, மத, அரசியல் உரிமைகள் மனித உரிமைகள் அடிப்படை உரிமைகளாக வலுப்படுத்தி புதிய சட்ட வகுப்பாக்கத்துக்குச் செல்வோம்.
இந்த பாரதூரமான பிரச்சினையில் இருந்து விடுபட முடியாது. இந்நாட்டில் பெண்கள், தாய்மார்கள் மற்றும் சிறுவர் தலைமுறைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
சிறுவர்கள் மற்றும் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் முதன்மையான அம்சமாக அமைந்து காணப்பட வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தி இதனை நடைமுறைத்த நடவடிக்கை எடுத்து செயற்படும்’ என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.