பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு நேர்மையான பேச்சுகள் தேவை
‘பயங்கரவாதம், பிரிவினை வாதம், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது எனும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ். சி. ஓ.) முதன்மையான குறிக்கோள்களை அடைய நேர்மையான பேச்சுகள் முக்கியம்’ என்று அதன் உச்சி மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற எஸ். சி. ஓ. உச்சி மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர், ‘எஸ்.சி. ஓவின் முதன்மையான குறிக்கோள்களான பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது, தற்போதைய காலத்தில் இன்னும் முக்கியமாகிறது. இதற்கு நேர்மையான பேச்சுகள், நம்பிக்கை, நல்ல அண்டை நாடு மற்றும் எஸ். சி. ஓ. சாசனத்தின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவை தேவை.
இந்த ‘மூன்று தீமைகளை’ எதிர்கொள்வதில் எஸ். சி. ஓ. உறுதியாகவும் சமரசமின்றியும் இருக்க வேண்டும். உலகமயமாக்கல் மற்றும் மறுசீரமைத்தல் என்பது இன்றைய யதார்த்தம்.
எஸ். சி. ஓ. நாடுகள் இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். ஒத்துழைப்பு என்பது பரஸ்பர மரியாதை மற்றும் இறையாண்மை சமத்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை அங்கீகரிக்க வேண்டும். ஒருதலைப்பட்சமாக செயல்படக் கூடாது. வர்த்தகம் மற்றும் போக்குவரத்தில் உலகளாவிய நடைமுறைகளை நாம் தெரிவுசெய்யாவிட்டால் முன்னேற முடியாது’ என தெரிவித்துள்ளார்.