சவூதி வழங்கிய 500 வீடுகளும் விரைவில் பயனாளிகளிடம் : பல வருடங்களின் பின் அதிரடி நடவடிக்கை
அம்பாறை மாவட்ட நுரைச்சோலை சுனாமி வீட்டுத் திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 500 வீடுகளையும், புனரமைத்து பயனாளிகளிடம் கையளிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தீர்மானித்துள்ளார்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு 2009 ஆம் ஆண்டு சவூதி அரேபிய அரசாங்கத்தின் உதவியுடன் இந்த வீடமைப்புத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டது.
எனினும்,இதுவரை இவ்வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்படவில்லை.
இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலிட் ஹமூத் அல் கத்தானி அண்மையில் ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடிய போது, இவ்வீடுகளை விரைவில் மக்களிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் 2011 ஜூனில், நிறைவடைந்தது.
இலங்கைக்கான சவூதி அரேபியாவின் முன்னாள் தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ், வீட்டுத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்
கையளித்தார்.
எனினும், நீதிமன்ற தீர்ப்பின்படி இவ்வீடுகளை பயனாளிகளிடம் கையளிப்பது, இடைநிறுத்தப்பட்டதாக தூதரகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.
500 வீடுகளைக் கொண்ட இவ்வீட்டுத் திட்டத்தில் பாடசாலை, சுப்பர் மார்க்கெட் வளாகம், மருத்துவமனை,பள்ளிவாசல் என்பவை உள்ளடங்கியுள்ளன.
இதனைப் பயனாளிகளுக்குப் பகிர்ந்தளிப்பதே சவூதி அரேபியாவின் எதிர்பார்ப்பென்றும் தூதரகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.