நுளம்புகளால் பரவும் அரிய வகை வைரஸ் நோய்

நுளம்புகளால் பரவும் அரிய வகை வைரஸ் நோய்

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் பவல்ஸ்கி(49) என்பவர், கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவரது தோட்டத்தில் பராமரிப்பு வேலை செய்து கொண்டிருந்தபோது கொசு ஒன்று அவரை கடித்துள்ளது. சாதாரண கொசுக்கடிதான் என்பதால் இதை அவர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

ஆனால் அடுத்த சில தினங்களில் ரிச்சர்டின் உடல்நிலை மோசமடைய தொடங்கியுள்ளது. அவருக்கு கடுமையான ஒற்றைத் தலை வலியும், வாந்தியும் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது.

மேலும் நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளாலும் ரிச்சர்ட் பாதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து ரிச்சர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடலை சோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு கொசுக்கடியால் ஏற்படும் ‘ஈஸ்டர்ன் ஈகுவின் என்சிபலடிஸ்'(EEE) என்ற அரிய வகை வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தனர்.

இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் உயிரிழந்து விடுகின்றனர் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதே சமயம், இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்தவர்கள் பெரும்பாலும் மூளை மற்றும் நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த அரிய வகை வைரஸ் நோயுடன் சுமார் 5 ஆண்டுகளாக போராடி வந்த ரிச்சர்ட் பவல்ஸ்கி, கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தார்.

இது குறித்து ரிச்சர்டின் மகள் அமெலியா பவல்ஸ்கி (18) கூறுகையில், “ஒரு சிறு கணப்பொழுதில் நம் வாழ்க்கை மாறிவிடலாம். எங்கள் குடும்பத்தில் அதுதான் நிகழ்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.

கொசுக்களால் பரவும் இந்த வைரஸ் நோய் மிகவும் அரிதானது, ஆனால் அதே சமயம் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறியுள்ளது.

காய்ச்சல், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, வலிப்பு, நடத்தை மாற்றங்கள் மற்றும் தூக்கமின்மை ஆகியவை இந்த நோய் பாதிப்பின் அறிகுறிகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பிற்கு இதுவரை தடுப்பு மருந்துகள் அல்லது தடுப்பூசிகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனவே, ஒருவருக்கு ‘ஈஸ்டர்ன் ஈகுவின் என்சிபலடிஸ்’ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் கொசுக்கடியில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )