கண்டி மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டும்
புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராளுமன்றத்தை கலைத்துள்ளமையால் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நாட்டில் பொதுத் தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்தத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் டெலிபோன் சின்னத்தில் நான் போட்டியிடுகின்றேன்.
கடந்த முறை நான் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட போது, 22,000க்கும் மேற்பட்ட வாக்குகளை வழங்கிய நீங்கள் இம்முறை அதிக வாக்குகளை வழங்குவீர்கள் என நம்புகின்றேன் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் (14) இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் செயற்குழுவின் கண்டி மாவட்ட அமைப்பாளர் விஷ்வா, கண்டி மாவட்ட செயலாளர் குலேந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துக் கொண்டுள்ளனர்.
இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துக் கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பாக கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரான என்னுடைய வெற்றி பயணத்திற்காக தனது முழு பங்களிப்பை வழங்குவதற்கு செயற்குழு இதன்போது தீர்மானித்துள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தமிழ் பிரதிநிதித்துவத்தை மீண்டும் கண்டி மாவட்டத்தில் தக்கவைத்துக்கொள்வதற்காகவும், இளம் சிந்தனையோடு மற்றும் தூர நோக்குடன் கண்டி மாவட்டத்தினுடைய அபிவிருத்திக்கும் எமது மக்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்கும், மக்களுடைய குரலாய் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும், தன்னுடைய வெற்றியை உறுதி செய்வதற்கு அனைவரும் ஒன்றினைந்து செயல்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இதன்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கண்டி வாழ் தமிழ் மக்களின் பிரச்சினைகளை சட்டவாக்க சபையில் எடுத்துக் கூறி அவர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதாக பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறிக் கொண்டாலும், இறுதியில் தங்களுடைய சுய இலாப அரசியலை முன்னெடுத்துள்ளனர்.
இதனால், கண்டி மாவட்ட தமிழ் மக்களுக்கான ஒரு குரலாக இலங்கையின் சட்டவாக்க சபையில் ஒலிப்பதற்கு எனக்கு பூரண ஆதரவை நீங்கள் வழங்குவீர்கள் என முழு நம்பிக்கையுடன் இந்தத் பொதுத் தேர்தலிலும் போட்டியிடுகின்றேன்.
அத்தோடு, கண்டி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்துக்கு இம்முறை பாரிய சவால் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உண்டு.
ஆதலால், நவம்பர் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்க உள்ள வாக்களார்களான நீங்கள் அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
இதனடிப்படையில் தீவிர பிரச்சார நடவடிக்ககைளை ஆரம்பிக்க இருப்பதோடு, கண்டி மாவட்ட சிறுபான்மை மக்களுடைய அபிலாஷைகளை நாடளவிலும், உலகளவிலும் கொண்டு செல்வதற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் எண்ணகருக்களை பிரதிபலிப்பதற்கும், அதற்கு தேவையான கொள்கையாக்கத்திலும் நாங்கள் ஒன்றாக இணைந்து செயற்படுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.” என தெரிவித்துள்ளார்.