தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்களுக்கு அழைப்பு!
பொதுத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, தேர்தலில் போட்டியிடும் கட்சிகளின் செயலாளர்கள் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, பொதுத் தேர்தல் செலவு வரம்புகள் குறித்துக் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இந்தத் தேர்தல் செலவுகள் தொடர்பில் சுயேட்சை குழுக்களின் தலைவர்களுடன் அந்தந்த மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அதிகாரிகள் கலந்துரையாடவுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடல்களின்போது எட்டப்படும் முடிவுகளுக்கமைய, வேட்பாளர் ஒருவரால் வாக்காளருக்குச் செலவிடக்கூடிய உச்சபட்ட தொகை உள்ளிட்ட விடயங்களைத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்கும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவுகள் தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்று முன்தினம் நிறைவடைந்துள்ளது.
அதற்கமைய, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 35 ஜனாதிபதி வேட்பாளர்கள் மாத்திரமே தங்களது செலவு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம். ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், 28 அரசியல் கட்சிகளும் தங்களது செலவு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், கிடைக்கப்பெற்றுள்ள அறிக்கைகளைக் கொண்டு, அது குறித்த மேலதிக நடவடிக்கைகளைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப்பிரிவு முன்னெடுக்கும் எனத்தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.