இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை : மாத இறுதியில் விசேட பேச்சுவார்த்தை !
இலங்கை – இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் புதிய முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளது.
அதன்படி, இரு நாடுகளினதும் கடற்றொழில் அமைச்சுக்களுக்கிடையில் விசேட பேச்சுவார்த்தையொன்று, எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின்போது இந்த பிரச்சினை தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டிருந்தது.
இதன்போது, தென்னிந்திய மீனவர்கள் இழுவைப் படகுகள் மூலம் இலங்கையின் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடிப்பதால், இலங்கை மீனவர்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்கின்றமை தொடர்பாக அரசாங்கம் அவரிடம் சுட்டிக்காட்டியிருந்தது.
அதற்கமைய, இவ் விவகாரம் இரு தரப்புக்கும் பெரும் பிரச்சினையாக உள்ளதாகவும், இம்மாதம் 29ஆம் திகதி இலங்கை, இந்திய கடற்றொழில் அமைச்சுக்களுக்கு இடையில்
6ஆவது தடவையாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து, அதனூடாக இருதரப்பு இணக்கப்பாட்டுடன் பொது தீர்வொன்றை எட்டுவதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பாக, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் முக்கிய உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,
எதிர்வரும் 29ஆம் திகதி, இலங்கை மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பாகஆராயும் சந்திப்பில் எம்மால் கலந்துகொள்ள முடியுமா எனக் கேட்கப்பட்டிருந்தது.
பங்கேற்க முடியும் என நாம் பதிலளித்திருக்கின்றோம். எவ்வாறிருப்பினும் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ள தூதுக்குழுவின் பட்டியலைக் கோரியிருந்தபோதிலும், அது இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
கொழும்பில் கடற்றொழில் அமைச்சினால் இந்த பேச்சுவார்த்தையை நெறிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய தூதுக்குழு பட்டியல் கிடைக்கப்பெற்றவுடன் அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.