லெபனானில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்!
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதிகளில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பின் டாப் தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதலை இஸ்ரேல் படைகள் முன்னெடுத்துள்ளன. இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஒராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இஸ்ரேலுக்கு எதிரான இந்த போரில் ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான் ஆதரவுடன் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா ஆதரவு அளித்து வருகிறது.
ஹமாஸ்க்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ஹிஸ்புல்லா அமைப்பினரின் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் மத்திய பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது. இது ஒருபக்கம் என்றால் இஸ்ரேலின் தரைவழி படைகள் ஐநா அமைதி குழு தலைமை தலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் இதில் இருவர் காயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெய்ரூட்டில் நடத்தப்பட்ட வான்வழி தக்குதலால் பெய்ரூட் நகரத்தில் பல இடங்களில் நேற்று பலத்த சத்தம் கேட்டது. லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கிய பிறகு நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.
லெபனான் சுகாதார அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“பெய்ரூட்டில் இஸ்ரேல் எதிரிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். 117 பேர் காயம் அடைந்தனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக லெபனான் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா மற்றும் அவருக்கு அடுத்த கட்ட தலைவர்கள் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
ஹிஸ்புல்லாவை ஒழித்து கட்டும் வரை ஓய மாட்டோம் எனக் கூறி இஸ்ரேல் தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது.