காசாவில் மற்றொரு பாடசாலையின் மீதுஇஸ்ரேல் வான் தாக்குதல் : 28 பேர் பலி
இஸ்ரேல் லெபனானில் தாக்குதல்களை நடத்தும் அதேநேரம் காசாவில் இடம்பெறும் தாக்குதல்களில் பலரும் கொல்லப்பட்டிருப்பதோடு வடக்கு காசாவில் இஸ்ரேலிய இராணுவம் முன்னெடுத்துவரும் படை நடவடிக்கைக்கு மத்தியில் அங்குள்ள மக்கள் இஸ்ரேலிய முற்றுகைக்குள் சிக்கியுள்ளனர்.
தெற்கு காசாவின் ரபா நகரில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று (10) நடத்திய வான்தாக்குதலில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டு மேலும் 54 பேர் காயமடைந்துள்ளனர்.
பலஸ்தீன செம்பிறை சங்க தலைமையகத்திற்கு அருகில் இருக்கும் ருபைதா பாடசாலை மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அந்தச் சங்கத்தின் அவசர மருத்துவக் குழு அங்கு விரைந்துள்ளதாக பலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் இருப்பதோடு காயமடைந்த சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.
காசா போர் வெடித்தது தொடக்கம் அங்கு இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் பாடசாலைகள் மற்றும் வசதிகள் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஹமாஸ் பயன்படுத்தும் கட்டடங்களைத் தாக்குவதாக, இவ்வாறான தாக்குதல்களை இஸ்ரேல் நியாயப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய வாரங்களாக இஸ்ரேல்,லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மீது அதிக அவதானம் செலுத்தி தாக்குதல்களை தீவிரப்படுத்தியபோதும் காசாவில் அது ஹமாஸ் அமைப்புடன் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.
குறிப்பாக ஜபலியா அகதி முகாமில் கடந்த சனிக்கிழமை தொடக்கம் முற்றுகையில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலியப்படை அங்கு நடத்திய தாக்குதல்களில் பலரும் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
அங்கு வீடுகளை இலக்கு வைத்து தொடர்ந்து வான் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அவ்வாறான தாக்குதல் ஒன்றில் மூன்று பலஸ்தீனர்கள்
கொல்லப்பட்டிருப்பதாகவும் கூறப்படடுள்ளது.
ஜபலியா வீதிகள் முற்றாக இடிபாடுகளாக மாறி இருப்பதோடு அடுக்கு மாடிகள் சின்னபின்னமாக்கப்பட்டிருப்பதாக அங்கிருப்பவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பல வெடிபொருட்களைக் கொண்டு 12 இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள்
மற்றும் படையினரை ஏற்றிய ஒரு டிரக் வட்டியை இலக்கு வைத்து தாக்குதல்
நடத்தியதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவானகஸ்ஸாம் படையணி குறிப்பிட்டுள்ளது.
ஜபலியா அகதி முகாமில் இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதல்களில் 130 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தெற்கு நகரான கான் யூனிஸில் வீடு ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் ஒரு குழந்தை மற்றும் சிறுவர்கள் உட்பட குறைந்தது ஐந்து பேர்
கொல்லப்பட்டுள்ளனர்.
அல் பக்காரி குடும்ப வீட்டின் மீதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக வபா
செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதில் தாய், தந்தை மற்றும் ஏழு மாதக்குழுந்தை உட்பட அவர்களின் மூன்று குழந்தைகளே கொல்லப்பட்டுள்ளனர்.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டு மேலும் 166 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக நீடிக்கு காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 42,065 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 97,886 பேர் காயமடைந்துள்ளனர்.
மறுபுறம் தெற்கு லெபனானில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதல் ஒன்றில் ஐந்து அவசரப் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகரான தஹியாவில் இஸ்ரேல் கடந்த
புதன் இரவிலும் இரு வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
லெபனானில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் 2,100 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதோடு ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.