காசாவில் உயிரிழப்பு 42,000ஐ தாண்டியது : வடக்கில் 5ஆவது நாளாக கடும் தாக்குதல் !
வடக்கு காசாவில் இஸ்ரேல் இராணுவம் வான் மற்றும் தரைவழி தாக்குதல்களை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக இடம்பெறும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 42,000ஐ தாண்டியுள்ளது.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 45 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 130 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன
சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்மூலம் கடந்த 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி தொடக்கம் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 42,010 ஆக உயர்ந்திருப்பதோடு
மேலும் 97,720 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் வடக்கு காசாவை கைப்பற்றும் முயற்சியாக இஸ்ரேல் அங்கு கடும் தாக்குதல்களை நடத்துவதாக தெரிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
‘திட்டமிடப்பட்டவாறு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டால், காசாவின் பெரும் பகுதியை இஸ்ரேல் இராணுவத்தால் கட்டுப்படுத்த முடியுமாக இருக்கும்’ என்று
இஸ்ரேலிய இராணுவத் தரப்பை மேற்கோள்காட்டி அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு காசாவின் ஜபலிய அகதி முகாமில் இஸ்ரேல் இராணுவம் ஐந்தாவது நாளாக நேற்று தனது படை நடவடிக்கையை முன்னெடுத்தது.
அங்கிருந்து ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்துவது மற்றும் ஒருங்கிணை
வதை தடுக்கும் வகையில் இந்தப்படை நடவடிக்கை முன்னெடுக்கப்படுவாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.
ஜபலியா மற்றும் அதற்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் இருந்து மக்களை வெளியேறும்படி இஸ்ரேல் இராணுவம் அடிக்கடி உத்தரவுகளை பிறப்பித்தபோதும்,
காசாவில் வெளியேறிச் செல்வதற்கு பாதுகாப்பான இடம் எதுவும் இல்லை என்று பலஸ்தீனர்கள் மற்றும் ஐ.நா. அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இந்நிலையில் ஜபலியா மற்றும் வடக்கு காசாவின் மற்ற பகுதியில் பலரும் கொல்லப்பட்டிருப்பதாக அஞ்சுவதாகவும் ஆனால் இஸ்ரேலின் குண்டு வீச்சுகளுக்கு மத்தியில் அங்கு செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் பலஸ்தீன சிவில்
அவசர சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘இந்தப் பகுதியில் குறைந்தது 400,000 பேர் சிக்கியுள்ளனர்’ என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா.நிறுவனத்தின் தலைவர் பிலிப்பேலசரினி, எக்ஸ் சமூகதளத்தில்
நேற்று (09) பதிவிட்டுள்ளார்.
‘இஸ்ரேலிய நிர்வாகத்தின் அண்மைய வெளியேற்ற உத்தரவுகளால் குறிப்பாக ஜபலியா முகாமில் இருந்து மக்கள் மீண்டும், மீண்டும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
காசாவில் எந்த இடமும் பாதுகாப்பு இல்லை என்பது தெரிந்ததால் பலரும் வெளியேறுவதை மறுத்து வருகின்றனர்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இஸ்ரேலின் புதிய உக்கிர தாக்குதல்கள் காரணமாக ஐ.நாவின் சில முகாம்கள் மற்றும் சேவைகள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டிருப்பதாகவும் லசரினி தெரிவித்துள்ளார்.
இதேவேளை காசாவில் ஆட்சி புரியும் ஹமாஸ் அமைப்பின் தூதுக்குழுவுக்கும் மேற்குக் கரையில் ஆட்சியில் உள்ள ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பத்தா அமைப்புக்கும்
இடையில் ஐக்கியத்திற்கான பேச்சுவார்த்தை ஒன்று நேற்று எகிப்து தலைநகர் கெய்ரோவில் இடம்பெற்றுள்ளது.