வைரஸால் உயிரிழந்த பன்றிகளின் இறைச்சி சந்தைகளில் விற்பனை !
மேல் மாகாணத்திலுள்ள பன்றிகள் பண்ணைகள் சிலவற்றில் வேகமாக வைரஸ் தொற்றொன்று பரவி வரு வதாகவும், இவ்வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இறக்கும் பன்றிகளின்இறைச்சிகள் கடைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
வைரஸால் இறக்கும் பன்றிகளின் இறைச்சியை குளிர்சாதன பெட்டிகளில் களஞ்சியப்படுத்தி வைத்து, சந்தையில் கிலோ 300 முதல் 400 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.
ஜாஎல பிரதேச சபையில் கடந்த (02) நடைபெற்ற சுற்றாடல் மற்றும் வசதிகள் குழு கலந்துரையாடலின் போது, மத்துகம பிரதேசத்தில் பன்றிகள் வளர்ப்பு பண்ணைகளில்
பன்றிகள் உயிரிழந்தமை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த பகுதியிலுள்ள பண்ணைகளில் தினமும் சுமார் 50 பன்றிகள் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவற்றின் இறைச்சி குறைந்த விலைக்கு மனித நுகர்வுக்கு விற்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள பன்றிப் பண்ணைகளில் வைரஸ் தொற்று பரவி வருவதாக அரசாங்க கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் சிறுநீர், உமிழ்நீர் துளிகள் போன்றவற்றின் மூலம் பன்றிகளுக்கு பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
சுவாசிப்பதில் சிரமம், நுரையீரல் செயலிழப்பு, காய்ச்சல், பசியின்மை போன்றவை இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகளென அடையாளம் காணப்பட்டுள்ளது.
எஞ்சிய கழிவு உணவுகளை, தீவனமாக பன்றி பண்ணைகளுக்கு கொண்டு செல்வதால் இந்த வைரஸ் அதிகமாக பரவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த வைரஸ் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.