சஜித்தை பிரதமராக்கி புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட ஐ.ம.ச தயார் !
பெரும்பான்மை ஆதரவுடன் சஜித் பிரேமதாசவை பிரதமராக்கி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு தயாரென, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
அதேபோன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திருடர்களையும் மோசடிக்கார்களையும் பிடிப்பதற்கும் வெளிநாடுகளில் அவர்கள்,பதுக்கி வைத்துள்ள நிதியை மீளப்பெற நடவடிக்கை எடுப்பாரானால் இரண்டு கைகளையும் உயர்த்தி நிபந்தனையின்றி அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தமது கட்சி தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டின் பெரும்பான்மையைப் பெறாத ஜனாதிபதி என்பதால், எதிர்க்கட்சி அவருடன் இணைந்து எதிர்காலத்தில் அரசாங்கத்தை அமைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழலில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியம் என்பதை தெரிவித்துள்ள அவர், ஊழல் மோசடிகளில் அகப்பட்டுள்ளவர்களை ஐக்கிய
மக்கள் சக்தியின் பட்டியலில் உள்வாங்கப் போவதில்லை என்ற தீர்மானத்தை தமது கட்சி எடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.