நீரில் மூழ்கி இருவர் மரணம்
இரத்தினபுரி, களுகங்கையில் நீராட சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுவர்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நேற்று (06) அவர்களின் பெற்றோர்கள் இரத்தினபுரி பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து நீதவான் முன்னிலையில் விசாரணைகள் நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இரத்தினபுரி ஹங்கம்மன ரஜமகா விகாரையில் தங்கியிருந்து இரத்தினபுரி தர்மசாலையில் கல்வி கற்கும் ஆர்.ஒதும் இமல் (வயது 14), ஜி.ஜி.இந்துவா தெருவை (வயது15) ஆகிய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவர் உட்பட சக நண்பர்கள் ஐந்து பேர் நேற்று முன்தினம் (05) பிற்பகல் களுகங்கை ஆற்றில் குளிக்கச் சென்று, அங்கே நீந்திக் குளிக்க முயற்சி செய்த போது, அங்குள்ள ஆழமான குழியில் ஒருவர் சிக்கியுள்ளதுடன், அவரை தேடும் பணியில் ஈடுபட்ட இன்னொரு சிறுவனும் அதே குழியில் சிக்கியுள்ளார்.
இதனைக் கண்ணுற்ற ஏனைய நண்பர்கள் உடனடியாக கூக்குரல் இட்டதையடுத்து பிரதேச மக்கள் சிக்கியவர்களை மீட்டு இரத்தினபுரி அரச பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவர்கள் ஏற்கெனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளில் சட்டவிரோதமான முறையில் ஆற்றின் நடுவே குழிகளைத் தோண்டி மாணிக்கக் கற்களை எடுப்பது வழக்கம் அவ்வாறான குழியில் சிக்கியே இந்த சிறுவர்கள் உயிரிழந்திருக்கலாம்
என சந்தேகம் தெரிவிக்கும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.