இருக்கைக்காக குடுமிப்பிடி சண்டையிட்ட பெண்கள்

இருக்கைக்காக குடுமிப்பிடி சண்டையிட்ட பெண்கள்

கர்நாடகத்தில் “சக்தி” திட்டத்தின் கீழ் பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணித்து வருகிறார்கள். இந்த திட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து அரசு பஸ்களில் பெண்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. அதாவது, கோவில்கள், சுற்றுலா தலங்கள், உறவினர்களின் வீடு என இலவசமாக பெண்கள் சென்று வருகிறார்கள். அதே நேரத்தில் அரசு பஸ்களில் இருக்கையை பிடிப்பதற்காக பெண்கள் மத்தியில் அடிக்கடி சண்டையும் ஏற்பட்டு வருகிறது.

இதேபோல், பீதரில் அரசு பஸ்சில் இருக்கைக்காக ஏற்பட்ட தகராறில் பெண்கள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட சம்பவம் நடந்துள்ளது.

பீதரில் இருந்து கலபுரகி நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சில் பெண்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இந் நிலையில் இருக்கையை பிடிப்பதில் பெண்கள் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு கைகலப்பாக மாறி இளம்பெண் ஒருவரும், வயதான பெண் ஒருவரும் குடுமியை பிடித்து சண்டையிட்டனர்.

மேலும் செருப்பாலும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். மேலும் இளம்பெண்ணின் ஆடையை பிடித்து வயதான பெண் இழுத்ததாக தெரிகிறது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர், கண்டக்டர், சக பயணிகள், அவர்களை பிரித்து இழுத்து சென்று சமாதானப்படுத்தினர். 2 பெண்களும் குடுமிப்பிடி சண்டையிடுவதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )