இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்கமாட்டோம்
பலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள காசா நகர் மீது இஸ்ரேல் போரை தொடங்கி ஓர் ஆண்டாகிறது. இந்த போர் தொடங்கிய நாளில் இருந்து லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த சூழலில்தான் கடந்த மாதம் 23-ந்திகதி லெபனான் மீது இஸ்ரேல் மிகப்பெரிய அளவிலான வான்வழி தாக்குதலை தொடங்கியது. இதில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, ஈரானின் மூத்த இராணுவ தளபதி அப்பாஸ் உள்பட ஏராளாமானோர் கொன்று குவிக்கப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த அடுத்தடுத்த மோதல்களினால் மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது.
இந் நிலையில், காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவததைத் தொடர்ந்து அரசியல் ரீதியாக இதற்கு தீர்வு காண்பதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தியதாகவும், போரை நிறுத்த மற்ற நாடுகளும் இதனை முன்னெடுக்க வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
“பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி கடந்தாண்டு மட்டும் 30 மில்லியன் யூரோக்கள் மதிப்பில் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு பிரான்ஸ் வழங்கியுள்ளது. ஆனால், இஸ்ரேலும் அதிகளவில் ஆயுதங்கள் வழங்கும் முதன்மை நாடாக பிரான்ஸ் இருந்ததில்லை. இன்றைய அரசியல் ரீதியான தீர்வுக்கு என்ன தேவை என்றால் காசாவில் நடத்தப்படும் போருக்குத் தேவையான ஆயுதங்கள் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.