ரணில் நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிப்பவர்
“ரணிலின் அத்திவாரத்திலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நகர்கிறது.” – என கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
“ ஜனாதிபதி தேர்தலின் பின் நாடு வழமைபோல இயங்கிக்கொண்டிருக்கிறது. நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் தளம்பல் இன்றி முன்செல்கின்றது. இந்நிலைமைக்கு அவசியமான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. எனவே இன்று ரணிலின் அத்திவாரத்திலேயே அரசாங்கம் நகர்கிறது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களின் நலன் கருதி தூர நோக்குடன் செயற்பட்டிருந்தார். அந்த வகையில் முன்வரும் காலத்திற்கு நாட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் இருப்பு பேணப்பட்டு இருந்தது.
அதே போல அத்தியாவசிய பொருட்களின் தொடர்ச்சியான கொள்வனவுக்கு தேவையான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதனால் நாடு சுமூகமாக முன்செல்கின்றது. அதுமட்டுன்றி சர்வதேச ரீதியாக மேற்கொள்ள வேண்டிய பேரம்பேசல்களும் முறையாக செய்யப்பட்டிருந்தது. அவற்றையும் ரணிலின் வழியில் முன்னெடுத்து செல்வதே இன்றைய அரசாங்கத்திற்குரிய செயற்பாடாக உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலை நடத்தமாட்டார் என சந்தேகம் தெரிவித்தார்கள். அவ்வாறு நடத்தி புதிய ஜனாதிபதி வந்தால் பொருளாதாரத்தை கொண்டு நடத்த முடியாதவாறு குழப்பிவிடுவார் என்றார்கள். ஆனால் அவை அனைத்தும் இன்று பொய்யாகி போய் உள்ளது. ஜனநாயக ரீதியாக தேர்தல் நடத்தப்பட்டது. ஆட்சியையும் ஜனநாயக ரீதியாக கையளிக்கப்பட்டது.
பொருளாதாரமும் ஸ்தீர தன்மையோடு பெற்றுக்கொடுக்கப்பட்டது. இவை எல்லாம் நாட்டையும், நாட்டு மக்களையும் நேசித்த தலைவர் ரணில் என்பதை உறுதிப்படுத்துகிறது. அதனை விடுத்து குறுகிய சுயலாப அரசியல் எண்ணத்தில் அவர் செயற்படுபவர் இல்லை என்பதும் நிரூபணமாகிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அவருடைய ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றது.” என தெரிவித்துள்ளார்.