தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாது
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படமாட்டாதென கல்வி அமைச்சும்
பரீட்சைகள் திணைக்களமும் நேற்று (29) அறிவித்துள்ளன.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக பிரதமரினால் நியமிக்கப்பட்ட 07 பேர் கொண்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளின்படி, வினாத்தாள் மதிப்பீடுகளை விரைவில் ஆரம்பித்து பெறுபேறுகளை தாமதமின்றி வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தரவும், கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலக்கா ஜயசுந்தரவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தரவும கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலக்கா ஜயசுந்தரவும் நேற்று (29) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சையை மீண்டும் நடத்துவது 10 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் மன நிலையில் கடுமையான தாக்கத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தும். அனைத்து பிள்ளைகளுக்கும் நீதி வழங்குவதும் அவசியம். மிகவும் பொருத்தமான மாற்றீடாக, பரீட்சைக்கு முன் விவாதிக்கப்பட்ட மூன்று கேள்விகளுக்குத் தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண் வழங்குவது சிறந்ததென அந்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.
அத்துடன், மீண்டும் பரீட்சை நடத்தப்படுவதனால் ஆசிரியர்கள்,
பிள்ளைகளின் பெற்றோர் மற்றும் பாடசாலை முறைமைக்கு கடும் சிரமங்கள் ஏற்படுமெனவும் குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இக்குழுவின் பரிந்துரைக்கமையவே, இவ்வாறு தீர்மானிக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி.அமித் ஜயசுந்தரவும், கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலக்கா ஜயசுந்தரவும் தெரிவித்தனர்.
2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 இல், நடைபெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களில் உள்ளடங்கிய வினாக்கள், பரீட்சைக்கு முன்னர் கலந்துரையாடப்பட்டதாக எழுந்த முறைப்பாடுகள் தொடர்பில் பரீட்சை திணைக்களம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்தது.
அந்த விசாரணையின் போது, முதல் பகுதி வினாத்தாளில் உள்ளது போன்ற மூன்று கேள்விகள் அடங்கிய ஆவணம் பரீட்சைக்கு முன் விவாதிக்கப்பட்டு, பரீட்சைக்கு முன்னைய தினம் சமூக வலைதளங்களில் பரவியமை தெரியவந்தது.
இதன்படி, ஆரம்ப விசாரணை அறிக்கையின் அடிப்படையில் பரீட்சை திணைக்களம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்து. இதையடுத்து,குற்றப்
புலனாய்வுத் திணைக்களம் தமது விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை கல்வி அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பித்தது.
சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்ட ஆவணம் தேர்வுக்கு முன்னதாக விவாதிக்கப்பட்டதாகவும், அதன்படி பரீட்சையின் முதல் தாளின், மூன்று கேள்விகள் பரீட்சைக்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக கிடைக்கப் பெற்ற ஏனைய முறைப்பாடுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், வேறு கேள்விகள் எதுவும் வெளியானதாக உறுதிப்படுத்தப்படவில்லை.
கல்வி அமைச்சரான பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில், இப்பிரச்சினை மற்றும் இப்பிரச்சினைக்கான சாத்தியமான தீர்வுகள் பற்றிய பகுப்பாய்வு அறிக்கை பரீட்சை திணைக்களத்தால் கல்வி அமைச்சின் செயலாளரூடாக பிரதமருக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
கல்வி அமைச்சர் என்ற ரிதியில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிபுணர் குழுவொன்று இந்த அறிக்கையை ஆய்வு செய்து, எடுக்கப்பட வேண்டிய மிகவும் பொருத்தமான நடவடிக்கைகளை பரிந்துரை செய்ய நியமிக்கப்பட்டது. அக்குழுவில் கல்வியியலாளர்கள், கல்வி உளவியலாளர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் புள்ளியியல் நிபுணர்கள் இதில் அடங்கியிருந்தனர்.