ஆட்கடத்தலில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்

ஆட்கடத்தலில் ஈடுபடுவோருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும்

ஆட்கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா – உக்ரேன் போருக்கு ஓய்வு பெற்ற இராணுவத்தினரை கூலிப்படையாக பயன்படுத்தி ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரி உட்பட மேலும் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில்  புதன்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யா – உக்ரேன் போரில் ஈடுபட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவத்தினர் தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

கடந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில், இந்த விடயம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட பாதுகாப்புப் பிரதானிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

ஆட்கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக தராதரம் பாராமல் சட்டத்தின் மூலம் அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்பதை முதலில் வலியுறுத்த வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக சுமார் 288 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த ஆட்கடத்தல் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் மூலம் போலி பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

அத்துடன் அதிக வேதனம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளன.இந்த ஆட்கடத்தலில் பலர் சிக்கி உள்ளனர்.

எனவே, இந்த ஏமாற்று முயற்சிகளில் பொதுமக்கள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது.

ரஷ்யா மற்றும் உக்ரேன் போருக்கான ஆட்கடத்தல் தொடர்பில் மேலதிக தகவல்கள் தெரிந்திருப்பின், 0112 401 146 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )