லெபனான் போர் நிறுத்த அழைப்பை மறுத்த இஸ்ரேல் தொடர்ந்தும் கடுமையான தாக்குதல் !
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே 21 நாள் போர் நிறுத்தம் ஒன்றுக்கு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் அழைப்பு விடுத்தபோதும் லெபனானில்
இஸ்ரேல் தொடர்ந்தும் உக்கிர தாக்கதல்களை நடத்தி வருவதோடு போர் நிறுத்த அழைப்பையும் நிராகரித்துள்ளது.
‘முழு பலத்துடன்’ தொடர்ந்து சண்டையிடும்படி இஸ்ரேல் இராணுவத்தை அறிவுறுத்தி இருக்கும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, போர் நிறுத்த அழைப்
புக்கு பதிலளிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
போர் நிறுத்தம் பற்றி செய்தி உண்மையில்லை. இது அமெரிக்கா–பிரான்சின் பரிந்துரை ஒன்று. அதற்கு பிரதமர் பதில் கூட அளிக்கவில்லை.
வடக்கில் மோதலை தணிப்பது குறித்த செய்தியும் உண்மைக்கு புறம்பானது.வழங்கப்பட்ட திட்டத்தின்படி முழு பலத்துடன் தொடர்ந்து போரிடுவதற்கு இஸ்ரேலிய பாதுகாப்புப்படையை பிரதமர் அறிவுறுத்தி உள்ளார்.
அதேபோன்று போருக்கான அனைத்து இலக்குகளும் எட்டும் வரை காசாவிலும் போர்
தொடரும் என்று நெதன்யாகு அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் ஒன்றை விரைவில் எட்டுவதற்கான வாய்ப்புப் பற்றி லெபனான் பிரதமர் நஜீப் மிகாதி குறிப்பிட்ட நிலையிலேயே இஸ்ரேல் அதனை நிராகரித்துள்ளது.
லெபனான் மற்றும் இஸ்ரேல் எல்லையில் 21 நாள் போர் நிறுத்தம் ஒன்றை உடன் அமுலுக்குக்கொண்டுவர அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பல கூட்டணி நாடுகளும்
அழைப்பு விடுத்ததோடு காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கும் ஆதரவை வெளியிட்டன. ஐக்கிய நாடுகள் சபையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தீவிர பேச்சு
வார்த்தைகளுக்குப் பின்னரே இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் உரை நிகழ்த்துவதற்காக தற்போது நியூயோர்க் சென்றிருக்கும் நெதன்யாகு, இந்த அழைப்புக்கு இன்னும் பதிலளிக்கவில்லை
என்று தெரிவித்துள்ளார்.
அவரது அரசில் உள்ள கடும்போக்காளர்களும் இந்த அழைப்பை நிராகரிக்கவும் ஹிஸ்புல்லா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தவும் கோரியுள்ளனர்.
வன்முறைகள் தணியாத சூழலில் தாக்குதலுக்கு தயாராக இருந்தரொக்கெட் ஏவு நிலைகள், ஆயுதக்கிடங்குகள் உட்பட பெக்கா பள்ளத்தாக்கு மற்றும் தெற்கு லெபனானில் சுமார் 75 ஹிஸ்புல்லா இலக்குகள் மீது கடந்த புதன்கிழமை
இரவு தொடக்கம் வான் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் நேற்று கூறியது.
இதில் லெபனான் நகரான யுனினேவில் புதன்கிழமை இரவுமூன்று மாடி கட்டடம் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் சிறுவர்கள்
உட்பட குறைந்தது 23 சிரிய நாட்டவர்கள் கொல்லப்பட்டதாக அந்த நகர மேயர் அலி குசாஸ் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் ஏற்பட்ட சிவில் யுத்தம் காரணமாக லெபனானில் 1.5 மில்லியன் சிரிய
நாட்டவர்கள் அடைக்கலம் பெற்றுள்ளனர்.
லெபனானில் இருந்து இஸ்ரேலின் மேற்கு கலிலி பகுதியை நோக்கி சுமார் 45 ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாகவும் அவை இடைமறிக்கப்பட்ட நிலையில்
எஞ்சியவை திறந்த வெளிகளில் விழுந்ததாகவும் இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது.
இஸ்ரேல் கடந்த புதனன்று லெபனானில் தாக்குதல்களை விரிவுபடுத்திய நிலையில் மேலும் 72 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்தது தொடக்கம் பலியானோர் எண்ணிக்கை 620ஐ தாண்டியுள்ளது.
இந்த இடைவிடாத மோதல் லெபனானில் வசிக்கும் தமது பிரஜைகள் தொடர்பில் அண்டை நாடுகள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமது பிரஜைகள் மற்றும் வெளிநாட்டவர்களை லெபனானில் இருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளைச்
செய்து வருவதாக துருக்கி பாதுகாப்பு அமைச்சு நேற்று குறிப்பிட்டது.
இஸ்ரேலின் தாக்குதல்களினால் தெற்கு லெபனானில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறி இருக்கும் நிலையில் அவர்களுக்கான பாடசாலைகள் மற்றும் ஏனைய இடங்களில் 500க்கும் அதிகமான தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாக லெபனான் உள்துறை அமைச்சர் பசம் மௌலவி தெரிவித்துள்ளார்.
லெபனானில் அரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதோடு மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பி
வழிகின்றன.
இந்நிலையில் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான சாத்தியமான தரைவழி தாக்குதல் ஒன்றுக்கு படையினர் தயாராகி வருவதாக இஸ்ரேல் இராணுவத் தளபதி குறிப்பிட்டிருப்பது,
இந்தப் போர் மேலும் மோசமடையும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.