பார் லைசனை இரத்து செய்யும் முடிவை வரவேற்கிறார் வேலுகுமார்
கடந்த ஆட்சியின்போது முறையற்ற விதத்தில் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மதுபான அனுமதி பத்திரங்களை இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தியினர் விடுத்துள்ள அறிவிப்பை கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் வரவேற்றுள்ளார்.
அத்துடன், பெருந்தோட்டப்பகுதிகளில் சமூக சீர்கேட்டுக்கு வழிவகுக்கும் வகையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் வேலுகுமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
“ ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்று பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் முதலில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நாடு மற்றும் நாட்டு மக்களின் நலன்கருதி அவர்களால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனது ஆதரவு என்றும் இருக்கும்.
அதேபோல கடந்த ஆட்சியின்போது முறையற்ற விதத்தில் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் மதுபானசாலை அனுமதி பத்திரங்களை இரத்து செய்யும் அதிரடி முடிவை ஜனாதிபதி எடுப்பார் என தேசிய மக்கள் சக்தியின் கூறிவருகின்றனர். இதனை நான் வரவேற்கின்றேன். அவ்வாறு செய்யுமாறும் கோரிக்கை விடுக்கின்றேன்.
சில பெருந்தோட்டப்பகுதிகளில் சதொக உள்ளிட்ட பல்பொருள் அங்காடிகள் இல்லை, மருந்தகங்கள் இல்லை, ஆனால் மதுபான சாலைகள் உள்ளன. இதனால் சமூக சீரழிவு ஏற்படுகின்றது. இவ்வாறான மதுபானசாலைகளை மூடுவதற்கும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனாதிபதியை விரைவில் நேரில் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளேன். இதன்போது இது தொடர்பான தகவல்கள், தரவுகள் அவரிடம் ஒப்படைக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.