தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றி
தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதோடு நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிப்பது தொடர்பான அனைத்து பேச்சுவார்த்தைகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகவும், நாடு வங்குரோத்து நியைில் இருந்து விடுபட்டது தொடர்பான உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைத்தவுடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான துரித திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (20) முற்பகல் நடைபெற்ற இலங்கை இளம் தொழில்முனைவோர் சபையின் (COYLE) நிர்வாக சபையுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
மிக விரைவில் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வது தனது எதிர்பார்ப்பு எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்குத் தேவையான மூலோபாய திட்டங்கள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய நவீனமயமாக்கல் அதில் பிரதான பிரிவு எனவும் குறிப்பிட்டார்.
20இற்கும் மேற்பட்ட நாடுகளின் வலையமைப்புடன் இணைந்த G20 அமைப்பின் இளம் தொழில்முனைவோர் கூட்டணியின் அங்கத்துவத்தை தற்போது பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாக ஜனாதிபதியிடம் அறிவித்த இலங்கை இளம் தொழில்முனைவோர் சபை, தாம் முன்னெடுத்துள்ள பல்வேறு தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டங்களுக்கு KPMG மற்றும் PMI உள்ளிட்ட அமைப்புகளுடன் கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தது.
ஆரம்ப நிலையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் வணிகங்களுக்கு விரைவான உதவி மற்றும் வசதிகளை வழங்குவதற்காக சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் (IIT) இணைந்து ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அமெரிக்கா, டுபாய், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள தனது நிர்வாக சபை உறுப்பினர்களின் ஆதரவுடன் இலங்கையின் இளம் தொழில்முனைவோர் சபை இலங்கையின் தொழில்முயற்சியாளர்களுக்கு தமது வர்த்தகங்களை விரிவுபடுத்துவதற்கும் உள்ளூர் உற்பத்திகளை உலகளவிற்கு கொண்டு செல்வதற்குமான வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளதாக அவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
”நமது நாட்டின் இருப்பிற்காக, சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்துவதிலும், ஏற்றுமதியை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்த பொருளாதார மாற்றத்தை ஆதரிப்பதற்காக நாங்கள் புதிய நிறுவனங்களை நிறுவ இருக்கிறோம். அதுவே முன்னோக்கி செல்லும் ஒரே வழியாகும்.
தனியார் பிணைமுறி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. எனவே, நமது வங்குரோத்து நிலையில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறுவதே அடுத்த முக்கியமான படியாகும். அதன் பிறகு, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் விரிவான திட்டத்தை தொடங்குவோம்.
ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி நாம் செல்லும்போது, அனைத்து முறைமைகளையும் மூலோபாயங்களையும் மாற்றியமைக்க வேண்டும். அதனை நாம் அடையாளம் கண்டுள்ளோம். விவசாய நவீனமயமாக்கல், விவசாயம் மற்றும் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளைத் திறந்து விடுவது குறித்து நாம் ஆராய்ந்து வருகிறோம். ஒற்றைச் சாளரக் முறைமையை (single-window system)அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த காலத்தில், நாங்கள் வங்குரோத்து நிலையிலிருந்து வெளியேறுவதற்கு முன்னுரிமை அளித்தோம். அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன. அடுத்த ஒரு மாதத்திற்குள் உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைக்கும். அதன் காரணமாக, 10-15 பில்லியன் டொலர்கள் மதிப்பீட்டில் கடன் செலுத்துவதற்கு நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .இது தொடர்பில் இன்று மாலை முறையான அறிவிப்பை வெளியிட எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத் திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர். எச்.எஸ். சமரதுங்க, சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் தினுக் கொழும்பகே மற்றும் இலங்கை இளம் தொழில்முனைவோர் சபையின் (COYLE) நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு