பரீட்சைகள் திணைக்களத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் இருந்து 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை கணக்கிடுவதற்காக பரீட்சை திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது (18) பெற்றோர்கள், பரீட்சை திணைக்களத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2024, ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில் அதில் 323,879 பரீட்சார்த்திகள் தோற்றினர்.
எவ்வாறாயினும், அலவ்வ பிரதேசத்தில் உள்ள ஆசிரியர் ஒருவர் புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் உள்ள சில வினாக்களுக்கு நிகரான வினாக்கள் கொண்ட யூகத் வினாத்தாள் ஒன்றை பரீட்சைக்கு முன்னர் வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.
சம்பவம் குறித்து, பல தரப்பில் இருந்து கிடைத்த முறைப்பாடுகளால், பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.
இதன்படி வினாத்தாள் தயாரித்த நிபுணர்கள் குழுவின் இணக்கப்பாட்டுடன் தொடர்புடைய 03 வினாக்களை நீக்கி இறுதி புள்ளிகளை வழங்க பரீட்சை திணைக்களம் நேற்று தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.