அநுராதபுரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகை தேவையில்லை !
அரசாங்கம் கதிர்காம புண்ணிய பூமிக்கும் மதுபான சாலை அனுமதி பத்திரத்தையும், பியர் அனுமதி பத்திரத்தையும் வழங்கி இருக்கிறது. விரைவில் மிகிந்தலை புண்ணிய பூமியிலும், அடமஸ்தானத்திலும் சொலஸ்மஸ்தானத்திலும் மதுபான சாலைகளை திறக்கக்கூடும். மதுபான சாலை அனுமதி பத்திரங்களையும், வைன் ஸ்டோர்ஸ் அனுமதி பத்திரங்களையும் வழங்குவது அரசாங்கத்தின் கொள்கையாக மாறி இருக்கின்றது. தாம் அதிகாரத்துக்கு வந்த உடனே இந்த அனுமதி பத்திரங்கள் அனைத்தையும் இரத்து செய்வோம். வரப்பிரசாதங்களுக்காகவும் சலுகைகளுக்காகவும் அரசியல் இலாபங்களுக்காகவும் வழங்கப்பட்ட இந்த சந்தோசங்கள் அனைத்தையும் அகற்றுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 63 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 16 ஆம் திகதி அனுராதபுர நகரில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
தற்பொழுது ரணிலும் அநுரவும் திருமண விருந்து சாப்பிடுகின்றனர். இந்த நாட்களில் அவர்கள் அரசியல் தேனிலவை கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். தன்னை தோல்வியடையச் செய்வதே அவர்களுடைய டீல் ஆகும். இந்த திருட்டுத்தனமான மோசடியான டீல்களுக்கு இடமளிக்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது சுட்டிக்காட்டினார்.
21 ஆம் திகதி வரை அவர்களுக்கு விருப்பமான முறையில் டீல்களை செய்து கொண்டு அரசியல் தேனிலவை கொண்டாட முடியும். நாட்டு மக்கள் இவர்களின் திருட்டு டீல்களையும் தேனிலவுக் கொண்டாட்டத்தையும் நிறைவுக்கு கொண்டு வருவார்கள் என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மக்களை வெற்றி பெறும் செய்வதற்கு ஒரே வழி ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்வதே ஆகும். அவ்வாறே வெற்றி பெற்ற பின்னர் முழு நாட்டிலும் அபிவிருத்தித் தளிர்கள் முளை விட ஆரம்பிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கான மொழி பயிற்சிகள், கணிணி விஞ்ஞானம், தகவல் தொழில்நுட்பக் கல்வி என்பனவற்றை வழங்கி, கல்விக்கான உரிமையையும் தொழிலுக்கான உரிமையை உறுதி செய்வோம். அறிவை மையமாகக் கொண்ட பொருளாதார மேம்பாட்டுக்கு வழியமைப்போம். அனைத்து பாடசாலைகளையும் சகல வசதிகளையும் கொண்ட பாடசாலைகளாக அபிவிருத்தியடையச் செய்வோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு நிவாரண அடிப்படையில் உரத்தை வழங்குவதோடு விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து பஸ் உரிமையாளர்களுக்கும் QR Code முறையில் எரிபொருள் நிவாரணத்தை வழங்குவோம். யானை மனித மோதலை நிறுத்துவதற்காக காணி முகாமைத்துவ திட்டமொன்றையும் உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது தெரிவித்தார்.
சோளம் அறுவடை செய்யப்பட்ட காலத்தில் ரணில் விக்கிரமசிங்க வெளிநாடுகளில் இருந்து சோளத்தை இறக்குமதி செய்தார். ஊவாவில் இருக்கின்ற உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களுக்கும் வெங்காய உற்பத்தியாளர்களுக்கும் இதே விடயங்களை செய்தார். மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதை விட தன்னை தோல்வியடையச் செய்வது அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கின்றது. ஆனாலும் இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் சரியான தீர்மானத்தை எடுத்திருக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதன்போது சுட்டிக்காட்டினார்.
அரசத்துறையிலும் தனியார் துறையிலும் உள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் துப்புரவாளர்கள் ஆகியோரின் அடிப்படை சம்பளத்தை 25,000 ரூபா வரை அதிகரிப்பதற்கான சட்ட வரைவுகளை முன்னெடுப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதிக்கு தங்குவதற்கு அனுராதபுரத்தில் மாளிகை ஒன்று உண்டு. அந்த மாளிகை ஜனாதிபதிக்கு தேவை இல்லை. இளைஞர்களின் தகவல் தொழில்நுட்ப கல்விக்காகவும், கணினி விஞ்ஞான கல்விக்காகவும், ஆங்கில மொழிக் கல்விக்காகவும், அறிவின் மத்திய நிலையமாக மாற்றி சர்வதேச தரத்திலான பயிற்சிகளை வழங்கும் மத்திய நிலையமாக பயன்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த மாளிகைகள் பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும். 220 இலட்சம் மக்களுக்காக சுபீட்சம் என்கின்ற மாளிகையை உருவாக்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.