நோயை குணப்படுத்தியவரை திரும்பி செல்லுமாறு கூறுபவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்
வடக்கு கிழக்கில் பெருந்திரளான மக்கள் மட்டுமன்றி மலையக மக்களும் ஜனாதிபதியை வெல்லவைக்கத் தயாராக உள்ளனர். என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்ற போது அவரின் வீட்டிற்கு தீவைத்தனர். ஜனாதிபதி மாளிகையையும் ஜனாதிபதி செயலகத்தையும் கைப்பற்றினர். ஆனால் அவர் அச்சப்படவில்லை. மாற்றம் என்பது சட்டியிலிருந்து அடுப்பில் விழுவதல்ல.
இருக்கும் நிலையை விட உயர் நிலைக்கு வருவதில் தான் மாற்றம் இருக்கிறது. நோயை குணப்படுத்தியவரை திரும்பிச் செல்லுமாறு கூறும் எதிரணிக்கு மக்கள் நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்.
வடக்கு கிழக்கில் பெருந்திரளான மக்கள் மட்டுமன்றி மலையக மக்களும் ஜனாதிபதியை வெல்லவைக்கத் தயாராக உள்ளனர். ரிசாதும், ஹக்கீமும் மறுபக்கத்தை ஆதரித்தாலும் பெருந்திரளான முஸ்லிம் மக்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாக உள்ளனர்.
76 வருடங்களாக என்ன செய்தீர்கள் என திசைகாட்டியினர் கேட்கின்றனர். தம்புத்தேகம விவசாயின் மகனாகப் பிறந்த அநுர குமார, ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்கு 76 வருட சாபம் தான் காரணம்.
சாதாரண தரம் மற்றும் உயர்தரம் கற்று பல்கலைக் கழகம் சென்று கற்பதற்கு புலமைப் பரிசிலும் வழங்கி தொழிலும், பெற்றுக் கொடுப்பது எமது நாட்டில் மாத்திரம் தான். 71 ஆம் ஆண்டுபோராட்டமும் 88 – 89 வன்முறையும் செய்யாதிருந்தால் அதனைவிட சிறப்பான இடத்திற்கு சென்றிருக்கலாம். பரீட்சார்த்தம் செய்து பார்த்து இருண்ட யுகத்திற்குச் செல்ல முடியாது.
மாற்றம் வேண்டும் என இருக்கும் ஆட்சியைத் துரத்தி, கிரீஸில் புதிய அரசு ஆட்சிக்கு வந்தது. ஐஎம்.எப்பை துரத்தினர். 13 வீதமாக இருந்த வரி 23 வீதமாக வரி உயர்த்தப்பட்டது. 13 வருடங்கள் துன்பப்பட நேரிட்டது. 5 வருடங்கள் பாதி சம்பளம் தான் வழங்கப்பட்டது. நமது நாட்டிலும் டொலர் 400 ரூபாவாக உயர்ந்து, உரத் தட்டுப்பாடு ஏற்படும் மாற்றத்தையா விரும்புகிறீர்களா?” என தெரிவித்துள்ளார்.