அநுரவிற்கு வாக்களித்து எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை இழக்க வேண்டாம்
திசைகாட்டிக்கும் அநுர குமாரவுக்கும் வாய்ப்பளிக்கச் சென்று இலங்கையின் இளைஞர் சமூகம் தமது எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை இழக்க வேண்டாம் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டார்.
மீண்டும் வரிசை யுகத்தை உருவாக்கும் அநுரகுமாரவின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து தான் கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு 03 நாட்கள் கடந்தும் இதுவரை பதில் அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, பொருளாதாரக் கொள்கை இல்லாத திசைகாட்டியிடம் தங்கள் எதிர்காலத்தை ஒப்படைக்க வேண்டுமா என்பதை இளைஞர்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாத்து வரிசையில் நிற்கும் மற்றொரு யுகத்திற்கு இடமளிக்காமல், மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதே தனது தேவை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டு மக்களின் சுமையை அதிகரிக்கத் தயாராக இருக்கும் ஒரு குழுவினரிடம் நாட்டின் பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
புத்தளத்தில் நேற்று (13) பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பொதுக் கூட்டத்தில் கட்சி, நிற, சாதி, மத வேறுபாடின்றி பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு வலுப்பெற்றுள்ள நிலையில் வாகனங்கள் மற்றும் இயந்திரமற்ற வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடையை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தனிநபர் வருமான வரி (PIT) கட்டமைப்பை திருத்துவதற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“சுய முயற்சியில் எழுச்சி கண்ட இலங்கையைக் கட்டியெழுப்பவதே எனது எதிர்பார்ப்பாகும். அதற்காக புத்தளம் வைத்தியசாலை செய்யப்படும். மீன்பிடித்துறை அபிவிருத்தி செய்யப்படும். தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்.
முன்னாள் விவசாய அமைச்சர் அநுரகுமார திசாநாயாக்க அவரை அவதூறு செய்வதற்கான செயற்பாடுகளை நான் முன்னெடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆனால் நான் அவரிடம் ஒரு கேள்வி மட்டுமே கேட்டேன். அநுரவின் வரவு செலவு திட்ட யோசனைகள் ரூபாவை வலுவிழக்க்ச செய்யும். அதனால் 500 ரூபாய் வரையில் டொலர் அதிகரிக்கும். என்ற விடயங்களை அவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் யோசனைகளின் அடிப்படையில் சுட்டிக்காட்டினேன்.
அதில் அநேகமான யோசனைகள் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தங்களுக்கு முரணாகவே காணப்பட்டது. நாம் நாணய நிதியத்துடன் செய்துகொண்டிருக்கும் ஒப்பந்தத்தின்படி அவர்கள் எமக்கு கடன் பெறுவதற்கு அனுமதி வழங்கவில்லை.
அதற்கு அமைவாகவே அரசாங்கம் வரவு செலவு திட்டத்தை தயாரித்துள்ளது. ஆனால் திசைக்காட்டியின் யோசனையில் பாரிய வரவு செலவுதிட்ட இடைவௌி காணப்படுகிறது. அதனை நிவர்த்திக்க அவர்கள் கடன் பெற வேண்டியிருக்கும். அவ்வாறு கடன் பெறும் பட்சத்தில் IMF உடன்படிக்கை மீறப்படும். அதன் பலனாக IMF உடன்படிக்கையிலிருந்து விலகினால் ரூபாவின் பெறுமதி சரிவைச் சந்திக்கும்.
எனவே, மக்கள் இந்த சுமையை தாங்கிக்கொண்டு அவதிப்பட வேண்டும் என்பதா அவர்களின் நோக்கம் என்பதே எனது கேள்வியாகும். மக்கள் மீது சுமைகளை சுமத்துவதால் திசைக்காட்டிக்கு கவலை வரவில்லையா? மீண்டும் வரிசைகளை உருவாக்குவதா அவர்களின் நோக்கம். என்ற கேள்விகளே எனக்கு உள்ளது. நான் அவர்களை அவதூறு செய்யவில்லை. மாறாக அவர்களிடம் பொருளாதாரத்தை வழிநடத்தும் இயலுமை உள்ளதா என்ற கேள்வியை மட்டுமே கேட்டேன்.
ரூபாவை பலப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையினையே ஐஎம்எப் முதலில் விதித்தது. அதன்படி செயற்பட்டதாலேயே இன்று ரூபாயின் பெறுமதி அதிகரித்திருக்கிறது. அதனால் கேஸ், எண்ணெய்,உணவு போன்றவற்றின் விலைகள் குறைந்துள்ளன. சமூர்த்தி போன்று மூன்று மடங்கு நிவாரணம் வழங்க முடிகிறது.
நாம் படிப்படியான சலுகைகளை வழங்கி வாழ்க்கை சுமையை குறைப்போம். இன்று நாட்டிற்கு மீண்டும் வாகன இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியிருக்கிறோம். வரி செலுத்தும் வரம்பை 5 இலட்சத்திலிருந்து 7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயாக அதிகரித்திருக்கிறோம். அதனால் வரிச்சுமை ஓரளவு குறையும்.
எனவே திசைக்காட்டியிடம் எதிர்காலத்தை ஒப்படைக்க மக்கள் தயாாரக இருக்கிறாார்களா என்பதே எனது கேள்வி. திசைக்காட்டியிடம் எனது கேள்விக்கு பதில் இல்லை. என்னோடு விவாதம் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதற்கு நான் தயார். அவர்களின் பொருளாதார முறைமை எதுவென சரியாக விளக்கம் சொன்ன பின்பே விவாதம் செய்ய முடியும்.
நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தவும். வருமானத்தை அதிகரித்து தொழில் வாய்ப்புக்களை உருவாக்கவும் எம்மால் முடியும். விவசாயம், சுற்றுலாத்துறைகளை பலப்படுத்துவோம். கிராமங்களில் வறுமையை போக்குவோம்.. மீன்பிடித்துறையையும் பலப்படுத்துவோம். அதனையும் ஏற்றுமதி துறையாக மாற்றுவோம்.
புதிய நாட்டை கட்டியெழுப்பும் திட்டம் எம்மிடம் உள்ளது. அதற்காக பயணத்தை ஆரம்பித்துள்ள வேளையிலேயே மாற்றியமைக்க வேண்டுமா என்பதை மனதில் கொண்டு சிலிண்டருக்கு வாக்களியுங்கள் இல்லாவிட்டால். சிலிண்டரும் இருக்காது ரூபாவின் பெறுமதியும் பாதுகாக்கப்படாது.” என தெரிவித்துள்ளார்.