ஜோபைடனுக்கு ஹமாஸ் கடும் கண்டனம்
காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி 6 மாதங்களை கடந்து விட்டது. இஸ்ரேல் படையினர் நடத்தி வரும் மும்முனை தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டி விட்டது.
தெற்கு காசாவில் உள்ள ரபா நகரில் உயிருக்கு பயந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கி உள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான ரபாவில் இறுதி கட்ட தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இங்கு தாக்குதல் நடத்தினால் ஏராளமானவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருகிறது.
எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் இரு தரப்பிலும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ரபாவில் தாக்குதல் நடத்த இஸ்ரேலுக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையும் மீறி கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலுக்கு 19 பேர் பலியாகி விட்டனர். இதனால் பதற்றமாக சூழ்நிலை நிலவி வருகிறது.
ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இன்னும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பிணைக் கைதிகளாக உள்ளனர். இவர்களை மீட்கும் வரை போரை நிறுத்த மாட்டோம் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் போர் நிறுத்த கோரிக்கையை ஏற்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகு தயாராக இல்லை.
தனது முடிவில் அவர் பிடிவாதமாக இருந்து வருகிறார். இந் நிலையில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 7-ந் திகதி நடந்த தாக்குதலின் போது ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களை விடுவித்தால் காசாவில் நாளையேபோர் நிறுத்தம் சாத்தியமாகும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜோபைடனின் இந்த கருத்துக்கு ஹமாஸ் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அந்த அமைப்பு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டை நாங்கள் கண்டிக்கிறோம். இது பல சுற்றுகளாக நடந்து வரும் பேச்சு வார்த்தையில் ஒரு பின்னடைவாக இதை நாங்கள் கருதுகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.