ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு அவசியமில்லை !
அமைச்சர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வீசா பெற்றுக்கொண்டமை தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் யாரும் தப்பிச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்திருந்தபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், எந்த அமைச்சரும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வீசா பெற்றுக்
கொண்டமை தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் ஜனாதிபதி தேர்தலின்
பின்னர் யாரும் தப்பிச்செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
எந்தவொரு நாட்டிலும் பத்து வருடங்கள் வாழ தான் வீசா வைத்திருப்பதாகவும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வீசா பெற வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 80 அமைச்சர்கள் நாட்டை விட்டு வெளியேற வீசா பெற்றுள்ளதாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,
எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அவ்வாறு கூறியிருந்தாலும் தேர்தல் பிரசாரங்களின் போது ஒவ்வொருவரும் கூறுவது போல் இதுவும் ஒரு அடிப்படையற்ற கூற்றாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.