வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா.
கொரிய தீபகற்பத்தில் வடகொரியா – தென்கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தன் எதிரி நாடுகளாக கருதும் தென் கொரியா, ஜப்பான், அமெரிக்காவை சீண்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
மேலும், தங்கள் நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் வந்தால் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.
இதனிடையே, அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகளை சமாளிக்க அணு ஆயுதப்படை தயார் நிலையில் இருப்பது உறுதி செய்யும் என வடகொரிய ஜனாதிபதி கிம் சமீபத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், வடகொரியா இன்று (12) மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது என்று தென்கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியா இன்று காலை பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி சோதனை நடத்தியதாகவும், ஏவுகணை வடகிழக்கு கடல் பகுதியில் விழுந்ததாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.