அனுரவுக்கு ஆதரவளிப்பவர்கள் கோட்டாவின் யுகத்தை மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டும்

அனுரவுக்கு ஆதரவளிப்பவர்கள் கோட்டாவின் யுகத்தை மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டும்

அனுரவுக்கு ஆதரவளிப்பவர்கள் கோட்டாவின் யுகத்தை மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும் வெறுமனே அலங்கார பேச்சுக்களுக்கும் இனிப்பான வார்த்தைகளுக்கும் மயங்கிவிட வேண்டாம் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்த நேர்காணலில் அவர் தெரிவித்தவை வருமாறு,

கேள்வி: ரணில் விக்ரமசிங்க தோற்கடிக்கப்பட்டால், மீண்டும் வரிசை யுகம் ஏற்படுமென எச்சரிக்கிறார்களே?

பதில்: கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படவில்லை. திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது. அவரின் மோட்டுத்தனமான ஆட்சியைப் பயன்படுத்தி, சிலர் நிலைமையைப் பயன்படுத்தினர். இந்நிலைமையைப் போக்குவதற்கு இந்தியாவே முதலில் 04 பில்லியன் டொலர் நிதியுதவி வழங்கியது. இவ்வுதவியைக் கொண்டு பெற்றோல், எரிபொருட்கள் மற்றும் தட்டுப்பாடான பொருட்களை ரணில் கொள்வனவு செய்தார். வரிசை யுகம் நீங்கத்தொடங்கியது. இந்த வகையில் இந்தியாவை மறக்க முடியாது.

கேள்வி: ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாதென்பதா உங்களது நிலைப்பாடு?

பதில்: அவ்வாறுமில்லை. அவரது திறமைகளைப் பயன்படுத்துவதற்கு அங்குள்ள ஊழல்வாதிகளும் இனவாதிகளும் விடப்போவதில்லை. கோட்டாவின் கையாட்களின் கைப்பிள்ளையாகவே இன்று ரணில் உள்ளார். புற்றுநோய் மருந்து மோசடி மற்றும் வி.எஸ்.எப். எனப்படும் வீசா மோசடிகள் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில்தானே இடம்பெற்றுள்ளன. ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் மனநிலையிலிருந்து ரணில் விக்ரமசிங்க இன்னும் விடுபடவில்லை.

கேள்வி: தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் களமிறங்கியுள்ளமை குறித்து உங்கள் கருத்தென்ன?

பதில்: பாவம், நல்ல மனுஷன் அவர். யாருடைய கயிற்றை விழுங்கியே களத்தில் இறங்கியுள்ளார். கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ஹிஸ்புல்லா இறங்கியதைப் போலதான் இதுவும். போட்டியிலிருந்து விலகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் விலகுவார். அவ்வாறில்லாது தமிழ், முஸ்லிம் வாக்குகளால் அரியநேத்திரன் வெற்றியீட்டினால் சந்தோசம்தான்.

கேள்வி: தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவுகள் அதிகரித்துள்ளதாகவும் விசேடமாக, அனுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியில் முஸ்லிம்கள் அதிக அக்கறையுடனும் செயற்படுவதாகக் கூறப்படுகிறதே?

பதில்: மாற்றம் தேவையெனக் கருதும் சிலர், தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்கத் தயாராகின்றனர். ஒரு “டெஸ்டிங்” செய்து பார்க்கப்போவதாக மாற்றம் வேண்டுவோர் கூறுகின்றனர். இது ஆபத்தானது. அனுபவமில்லாத கோட்டாபயவை ஆட்சிக்கு அமர்த்தியதால், அனுபவித்தவற்றை மறக்க முடியுமா? சந்தர்ப்பம் வழங்கிப் பார்க்க இது “செஸ்” விளையாட்டல்ல.

கேள்வி: கொரோனா காலத்தில் முஸ்லிம் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டபோது, நீங்கள் ரணில் விக்ரமசிங்கவிடம் கலந்துரையாடாவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

பதில்: ஜனாஸாக்கள் எரிக்கப்பட்ட காலத்தில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கவில்லையே! இந்தக் காலத்தில் நான் சிறை வைக்கப்பட்டிருந்தேன். வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளையில்தான், என்னை இழுத்துக்கொண்டு சென்றனர். இருந்தபோதும், பாராளுமன்றத்துக்கு வந்த போதெல்லாம், இதற்கு எதிராகக் குரல் கொடுத்தேன்.

கேள்வி: சிங்கள பிரதேசங்களில் உங்களது வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறதே?

பதில்: நீதிமன்றத்துக்கு கல் எறிந்ததாகக் குற்றம் சுமத்தினர். வாக்களிப்பதற்காக பஸ்களில் மக்களை ஏற்றிச் சென்றதாக வழக்குத் தொடர்ந்தனர். ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் (ஐ.எஸ்.ஐ.எஸ்) எனக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்தனர்.

சிங்கள மக்களிடத்தில் என்னைப் பற்றித் தவறான கருத்துக்களை விதைக்கவே இவற்றையெல்லாம் செய்தனர். இதனால், இக்காலத்தில் என்னைப்பற்றி தென்னிலங்கையில் ஒரு சலசலப்பு இருக்கவே செய்தது. நீதிமன்றத் தீர்ப்புக்கள் என்னை நிரபராதியென நிரூபித்ததால் நிலைமைகள் மாறிவிட்டன. இப்போது சிங்களப் பிரதேசங்களில் பிரச்சாரங்களில் ஈடுபடுகிறேன். என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )