எந்த வரிசையில் நிற்பது ?
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு எதிர்வரும் 21ஆம் திகதியன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் நடைபெறவுள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைக்கும் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கை, புதன்கிழமை (18) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகின்றது. அதற்கு பின்னர் எவரும் பிரசார நடவடிக்கையில் ஈடுபடமுடியாது.
இந்நிலையில், வாக்களிப்பு தினத்தன்று வாக்குச்சாவடிகளுக்குச் செல்லும் தாங்கள் எந்தவரிசையில் நிற்பது என சமபால் உறவாளர்கள் (LGBTQ) கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒருசில வாக்குச்சாவடிகளில் ஆண், பெண் இருபாலாருக்கும் தனித்தனி வரிசைகள் அமைக்கப்படும். சில வாக்குச்சாவடியில் இருபாலாரும் ஒரே வரிசையில் சென்றே வாக்களிப்பார்கள்.
இந்நிலையில், இருபாலாரும் செல்லும் வரிசையிலேயே சமபால் உறவாளர்களும் சென்று வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
எந்த வரிசையில் சென்று வாக்களிப்பது என சமபால் உறவாளர்களின் சங்கத்தால் தங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தை ஆராய்ந்ததன் பின்னரே இந்த தீர்மானத்தை எடுத்ததாக ஆணைக்குழு அறிவித்துள்ளது,
எனினும், கலாசாரம் மற்றும் மதம் காரணமாக, கிழக்கு மாகாணத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரண்டு வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.