பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கே ஆதரவு

பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கே ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பெருந்தோட்ட மக்களின் 99 வீத வாக்குகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெறுவார் எனவும் பெருந்தோட்ட சமூகத்தில் வேறு எந்த தீர்மானமும் இல்லை எனவும் தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட மக்களுக்கு வாக்குரிமையைப் பெற்றுக்கொடுத்தது முன்னாள் ஜனாதிபதி ஜெ. ஆர். ஜயவர்தன மற்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்று நினைவு கூர்ந்த இராஜாங்க அமைச்சர், அதற்காக 10 மாவட்டங்களில் பரந்து வாழும் பெருந்தோட்ட மக்கள் ஒரே குழுவாக நன்றி தெரிவிப்பதற்கு ஒன்றிணைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் இதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர், ‘’இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள் நடத்தும் பொதுக்கூட்டங்களை விட, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளும் பேரணிகளுக்கு ஒரு சிறப்பு இருக்கின்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொதுக்கூட்டங்களுக்கு மாத்திரமே இந்நாட்டின் தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பாகுபாடு இன்றி மக்கள் ஒன்று கூடுவதே இதற்குக் காரணமாகும்.

இந்த நாட்டைப் பெரும் பொருளாதாரப் படுகுழியில் இருந்து மீட்டெடுத்த தலைவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாம் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளோம். இந்த நாட்டில் 40% மக்கள் இந்த தேர்தலில் மௌனமாகவே இருக்கின்றனர்.

மலையகம், வடக்கு கிழக்கு அல்லது தெற்கு என அனைத்து மாகாணத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியினரே மௌனமாக உள்ளனர். அவர்கள் மௌனமாக இருந்தாலும் செப்டம்பர் 21 ஆம் திகதி தங்கள் கடமையையும் பொறுப்பையும் சரியாக நிறைவேற்றுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

பெருந்தோட்ட மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. ஆனாலும் அவர்கள் இந்த நாட்டை நேசிக்கும் மக்கள். அவர்கள் எப்போதும் ஆயுதம் ஏந்தியதில்லை. மேலும் அவர்கள் இனவாதிகளும் அல்ல.

இதன்படி ஜனாதிபதி தேர்தலில் 99% பெருந்தோட்ட மக்களின் வாக்குகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெறுவார். அது தொடர்பாக பெருந்தோட்டத்தில் வேறு முடிவு இல்லை. மேலும் இனவாதமற்ற தலைவர் ஒருவரே எமக்குத் தேவை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இனவாதம் இல்லை.

உலகின் பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சியால் என்ன நடக்கிறது என்பதை நாம் கடந்த காலத்தில் அனுபவித்திருக்கிறோம். வரிசையில் நின்றாலும் மருந்து கிடைக்காத காலமும் இருந்தது. தோட்டத்தில் இருந்து வைத்தியசாலைக்கு செல்ல முச்சக்கர வண்டி இன்றி கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்தனர்.

அவை நாம் அனுபவித்த விடயங்கள். அவ்வாறு நடக்கவில்லை என்று யாரும் கூற முடியாது. நாம் ஏன் மீண்டும் அந்த நிலைக்குச் செலல வேண்டும்?அரசியல் கட்சிகள், நிறம் முக்கியமில்லை. பொருளாதார ரீதியில் நாட்டைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

வடக்கு, தெற்கு, மலையகம் என்று நாம் அனைவரும் ஒன்றிணைவதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும். அனுபவம் இல்லாத, உலகம் ஏற்காத தலைவரை தெரிவு செய்வதா? அல்லது முதிர்ந்த, புத்திசாலி, தொலைநோக்குப் பார்வை கொண்டவர் என உலகமே அங்கீகரித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்வதா என்ற கேள்விக்கான பதில் உங்களிடமே உள்ளது.

ஜனாதிபதி ஜே. ஆர்.ஜயவர்தனவின் காலத்தில் இருந்தே சர்வதேச சமூகத்துடன் உறவுகளைக் கட்டியெழுப்பிய தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அத்தகைய ஒரு தலைவர் ஒருவர் உள்ளாரா என்பதை பார்க்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். சர்வதேச ஆதரவு இல்லாமல் நம் நாடு மீள முடியாது.

குறுகிய காலத்தில் இந்த நாட்டை மீட்டெடுத்தோம் என்ற காரணத்துக்காக மாத்திரமன்றி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை முன்னேற்றும் திட்டத்தை அடுத்த ஐந்தாண்டுகளில் அமுல்படுத்த வேண்டுமானால் இந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர் மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும்.

கேஸ் சிலிண்டரை வெற்றிபெற உங்கள் வாக்கு அவசியம். இல்லை என்றால், மறுநாளில் இருந்து கேஸ் சிலிண்டர்களைத் தேடி வீதிக்கு செல்ல வேண்டி இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )