அம்பாறை மாவட மக்களின் விருப்பத்துக்கமையவே எனது அரசியல் பயணம் தொடரும் !
ஜனாதிபதித் தேர்தலில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்று நான் எவருக்கும் விரல் நீட்டமாட்டேன்.மக்களின் விருப்பு வெறுப்புக்களுக்கு அமையவே எனது செயற்பாடு அமைந்திருக்கும் என தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
பாண்டிருப்பு மறுமலர்ச்சி சன சமூக நிலையத்தின் ஏற்பாட்டில் பாண்டிருப்பு பொது நூலக வளாகத்தில் சரஸ்வதி பூங்கா திறப்பு விழா உலக எழுத்தாளர் தமிழ்மணி உமா வரதராஜன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையி
லேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், எனது அரசியல் பயணமானது அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் விருப்பத்துக்கமையவே தொடரும். இதேவேளை எமது இருப்புகலை கலாசாரம் என்பவற்றை தொலைத்துவிட்டு தமிழ்த்தேசியம் பேசுவதால் எந்த பலனும் இல்லை.
வடக்கு கிழக்கிலுள்ள எட்டுமாவட்டங்களில் தமிழ் மக்கள் வாழ்கின்றார்களாயினும் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு தொடர்ந்தும் முகங்கெடுத்து வருகின்றனர்.
நாம் சற்று அசந்து தூங்கினால் எமது இருப்பு கேள்விக்குறியாகிவிடும்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் நிலங்கள் மாற்று சமூகத்தினரால் கபளீகரம் செய்யப்படும் நிலை தொடர்கின்றது.
இதனால் நாம் விழிப்புடன் இருக்கவேண்டியுள்ளது. பொத்துவில், திருக்கோவில் போன்ற இடங்களில் வன இலாகாவினால் இரண்டாயிரத்து அறுபத்து மூன்று ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டபோது அதனை மக்களுக்கு மீட்டுக் கொடுத்துள்ளதாக அவர்
தெரிவித்தார்.