அரசாங்கத்தால் சட்ட நடவடிக்கைகளை மாத்திரமே எடுக்க முடியும் தீர்ப்பை வழங்க முடியாது !
தாம் ஆட்சிக்கு வந்தால், ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக்குவோம் என்று ஜே.வி.பி. கூறினாலும், அதனைச் செய்வதற்கு நீதித்துறை அதிகாரங்களையும், வழக்குத் தாக்கல் செய்யும் அதிகாரத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்ள நேரிடும் எனவும், அதற்காக அரசியலமைப்பை மாற்றியமைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பில் அரசாங்கத்தால் சட்ட நடவடிக்கைகளை மாத்திரமே எடுக்க முடியும், தீர்ப்புகளை வழங்க முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தாம் பிரதமராக இருந்த காலத்தில் ஊழல் எதிர்ப்பு செயலகத்தை ஜே.வி.பி. நிர்வகித்ததை நினைவு கூர்ந்தார்.
கொழும்பு மெண்டரினா ஹோட்டலில் நேற்று (07) இடம்பெற்ற முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான வட்டமேசை கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இந்நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இதன்போது ஜனாதிபதி நீண்ட விளக்கமளித்ததுடன், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எழுப்பிய கேள்விகளுக்கும் ஜனாதிபதி சாதகமான பதில்களை வழங்கினார்.
இலங்கையில் மோசடி மற்றும் ஊழலுக்கு எதிராக தனது தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் அரசாங்கம் ஒத்துழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், ஊழல் ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றுவது மற்றும் குற்றத்தின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துகள் தொடர்பான சட்டமூலத்தை தயாரிப்பது உள்ளிட்ட 20 முக்கிய நடவடிக்கைகளை தனது அரசாங்கம் ஏற்கனவே முன்னெடுத்துள்ளதாகம் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். ஊழலை ஒழிக்க கோஷங்கள் மட்டும் போதாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான வழக்குகள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசாங்கம் வழக்குகளை தாக்கல் செய்கிறது, ஆனால் இறுதியில் யார் குற்றவாளி என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றத்தின் பொறுப்பு என்று கூறினார்.
அரசாங்கத்தால் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியுமே தவிர தீர்ப்பு வழங்க முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தான் பிரதமராக இருந்த காலத்தில் ஊழல் ஒழிப்பு செயலகத்தை நிர்வகித்த மக்கள் விடுதலை முன்னணிக்கு இது தெரியும் எனவும் அவர்கள் தாம் அந்த வழக்கு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை எனக் குறிப்பிட்டால் அது பொய்யானது என்றும் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் தேவையான போது மட்டுமே தலையிட்டாலும், பல சந்தர்ப்பங்களில் நுகர்வுப் பொருட்களின் விலை சந்தைக் காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது என்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் முன்னேற்றத்திற்காக ‘அஸ்வெசும’ போன்ற வேலைத் திட்டங்களின் ஊடாக அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கைத்தொழில்துறை அபிவிருத்தி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பல தசாப்தங்களாகக் கூறப்படும் “ஆரம்பக் கைத்தொழில்” என்ற கருத்தாக்கத்திலிருந்து விலகி, அதற்கு மாறாக ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கிச் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.
நாட்டின் வெளிநாட்டுக் கடன் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கடன் மறுசீரமைப்பு பணிகள் தொடர்பான இறையாண்மை பிணைமுறிப் பத்திரங்களை மீளச் செலுத்துவதற்கு 2029 வரை கால அவகாசத்தைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளுக்கான VAT வரி விதிப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு VAT வரி விலக்கு பொருந்தும் என்றும் ஆனால் உள்நாட்டு வர்த்தகத்திற்காக உற்பத்தியாளர்களுக்கு VAT வரி செலுத்த வேண்டிவரும் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், மூலதனம் வழங்குதல், மற்றும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வது உள்ளிட்ட இந்நாட்டில் ஆரம்பிக்கப்படும் வர்த்தகங்ளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது விளக்கமளித்தார். இந்நாட்டிலிருந்து புத்திஜீவிகள் வெளியேற்றத்தைத் தடுக்கவும், நாட்டில் இளம் தொழில் வல்லுநர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கவும் டிஜிட்டல் மாற்றத்தில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்க ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை தகுதியின் அடிப்படையில் மேற்கொள்வதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பல்வேறு சமய மற்றும் கலாசார தாக்கங்களினால் வடிவமைக்கப்பட்ட வர்த்தக மையமாக இலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க பங்கு இருப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், தேசிய நலன்களைப் பேணுவதுடன், நாட்டை ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரமாக மாற்றுவதற்கு தமது தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொவிட் தொற்றுநோய்களின் போது இறந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு அன்றைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததாகவும், அந்தக் கொள்கையினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்குவதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சியோனிச நாடுகளுடனான உறவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இலங்கை தூதரகத்தை பேணினாலும், ஜெருசலேமில் புதிய தூதரகம் திறக்கப்படவில்லை என்றும் காஸா பகுதியில் இடம்பெற்று வரும் நடவடிக்கைகளை தாம் முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, பலஸ்தீன அரசை ஸ்தாபிப்பதற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது வடமாகாண முஸ்லிம் மக்கள் இடம்பெயர்ந்தமை தொடர்பிலான கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, அவர்களில் பலர் தற்போது வேறு இடங்களில் குடியேறியுள்ளதாகவும், அவர்கள் தமது பூர்வீக பகுதிகளுக்கு திரும்புவதற்கு தயங்குவதாகவும் தெரிவித்தார்.
இதன்போது, கிழக்கு மாகாணத்தில் காணி தொடர்பான பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காணி முதன்மையாக அரசாங்கத்திற்குச் சொந்தமானது என்பதால், அந்தப் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் நியாயமான தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்தார்.
பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர்களான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, ஏ. எச். எம். பௌசி, முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி உட்பட பெருமளவிலான சிவில் சமூகப் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.