அனைவரும் விரும்பி உண்ணும் முட்டை லொலிபொப் !
முட்டைக் குழம்பு, முட்டைப் பொரியல், முட்டை குருமா போன்றவற்றை சாப்பிட்டிருப்போம். சற்று வித்தியாசமாக முட்டை லொலிபொப் செய்து பார்ப்போமா?
தேவையான பொருட்கள்
- முட்டை (அவித்தது) – 4
- பச்சை மிளகாய் – 2
- வெங்காயம் (வெட்டியது) – 1
- மிளகாய் தூள் – தேவையான அளவு
- தனியா தூள் – தேவையான அளவு
- மசாலாத் தூள் – தேவையான அளவு
- மிளகுத் தூள் – தேவையான அளவு
- சீரகத் தூள் – தேவையான அளவு
- ப்ரெட் தூள் – தேவையான அளவு
- கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முட்டைகள் நான்கையும் அவித்து துருவி எடுத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் துருவிய முட்டைகளைப் போட்டு அதில் வெட்டி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, மசாலாத் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரகத்தூள், உப்பு மற்றும் ப்ரெட் தூள் சேர்த்து இலேசாக தண்ணீர்விட்டு உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு, ஒரு கரண்டி மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளவும்.
செய்து வைத்துள்ள உருண்டைகளை எடுத்து முட்டைக் கலவையில் போட்டெடுத்து, பின்னர் ப்ரெட் தூளில் பிரட்டி எடுத்துக்கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக வரும் வரையில் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
பொரித்த உருண்டைகளில் டூத் ஸ்டிக்கை குத்தி வைத்தால் சுவையான முட்டை லொலிபொப் ரெடி.