தீர்வை முன்வைக்க விரும்பாத அநுரவை நம்பி தமிழ் மக்கள் எப்படி வாக்களிப்பது ?

தீர்வை முன்வைக்க விரும்பாத அநுரவை நம்பி தமிழ் மக்கள் எப்படி வாக்களிப்பது ?

தமிழ் மக்களின் நீண்ட கால இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வினை தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க முடியாத ஜனாதிபதி வேட்பாளர் அநுரவை தமிழ் மக்கள் எவ்வாறு நம்பி வாக்களிக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த சட்டத்தரணியுமான நல்லதம்பி சிறிகாந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர ‘மாற்றத்திற்காக வாக்களியுங்கள்!’ என்ற கோரிக்கை தொடர்பில் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களால் மறக்க முடியாத ஜே.வி.பியில் தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் ஜனாதிபதி வேட்பாளர் அநுர களம் இறங்கி உள்ளார்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை சட்டரீதியாக பிரித்தவர்கள், தமிழ் மக்களிடம் மாற்றத்திற்காக வாக்களியுங்கள் எனக்கேட்கின்ற நிலையில் தமிழ் மக்கள் என்ன நம்பிக்கையில் வாக்களிக்க முடியும்?

ஊழலை ஒழிக்கப் போகிறோம், நாட்டை சூறையாடியவர்களுக்கு தண்டனை வழங்கப் போகிறோம் என அநுரகூறுவது நல்ல விடயம். அதை மட்டும் வைத்து தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று விடலாம் என நினைக்கக்கூடாது.

தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்பார்க்கும் நீங்கள் தமிழ் மக்களின் நீண்டகால இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில். எதுவும் குறிப்பிடவில்லை.

உங்களைப் போன்ற பல இடதுசாரி தலைவர்களை நான் கண்டிருக்கிறேன்.

அவர்களுடன் தற்போதுவரை நீண்ட உறவினை கொண்டிருந்தவன் என்ற ரீதியில் தமிழ் மக்களின் இனப் பிரச்சனைக்கான தீர்வினை உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட மாட்டீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

ஆகையினால் தம்பி அநுரவிடம் நான் ஒன்றைக் கூறுகிறேன்.

அதாவது தேர்தலுக்கு இன்னும் சில நாள்கள் இருக்கின்ற நிலையில் நாளையோ நாளை மறு தினமும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்குங்கள். அவ்வாறு உள்ளடக்கினால் உங்களுக்கான ஆதரவு தொடர்பில் நாங்கள் சிந்திப்போம்.

கடந்த காலங்களில் ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கிய சரத் பொன்சேகாவுக்கு தமிழ் மக்கள் வாக்களித்தமை பாரிய தவறு என்பதை தமிழ் மக்கள் உணர்ந்துள்ளனர்.

தேர்தல் காலங்களில் தமிழ் மக்களிடம் தேன் போன்ற வார்த்தைகளைக் கூறி வாக்குகளை கேட்கும் தென்னிலங்கை வேட்பாளர்கள் தொடர்பில் தமிழ் மக்கள் நம்பத்தயாராக இல்லை.

அதன் காரணமாக நீண்ட காலமாக தென்னிலங்கை வேட்பாளர்களால் ஏமாற்றப்பட்ட தமிழ் மக்கள் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒரு வரை நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டனர்.

எமது பொது வேட்பாளர் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் கோரிக்கைகளை தாங்கி தென் இலங்கைக்கு சர்வதேசத்திற்கும் ஒரு செய்தியை கூறவே களம் இறங்க உள்ளார்.

ஆகவே தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை முன் வைக்காத எந்த ஒரு வேட்பாளரையும் தமிழ் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் என்பதனை தென்னிலங்கையில் இருக்கின்ற வேட்பாளர்கள் அனைவரும் விளங்கி கொள்ள வேண்டும் என அவர் மேலும்
தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )