விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி உருவான கதை

முதன்மை கடவுளாக விளங்கும் விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்படுவது தொடர்பாக பல புராண கதைகள் உள்ளன. கஜமுகாசுரனை கொன்றதால் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது என்பதும் ஐதீகம்.

சிவபெருமானின் அருள் பெற்ற கஜமுகாசுரன் தான் பெற்ற வரத்தின் வல்லமைகளால் தலைகணம் கொண்டு தேவர்களை பல வழிகளில் துன்புறுத்தி வந்துள்ளார். தன்னை மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ யாரும் கொல்ல முடியாதபடி கஜமுகாசுரன் வரம் பெற்று இருந்ததால் செய்வதறியாமல் தேவர்கள் திணறி வந்தனர்.

எனவே, அனைத்து தேவர்களும் ஒன்றாக திரண்டு சிவ பெருமானிடம் சரணடைந்தனர். இதனால் அவர் ஆவணி மாத சதுர்த்தி அன்று விநாயகரை யானை முகத்தோடும், மனித உடலோடும் படைத்து கஜமுகாசுரனை அழிக்க அனுப்பி வைத்தார்.

விநாயகருக்கும், கஜமுகாசரனுக்கும் இடையே மிகப்பெரிய போர் நடைபெற்றது. போரின் முடிவில் எந்த ஆயுதங்களாலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்று கஜமுகாசுரன் வரம் பெற்றதால் தன்னுடைய கொம்புகளில் ஒன்றை ஒடித்து அவனை சம்ஹாரம் செய்வார்.

பின்னர் கஜமுகாசுரனை மூஞ்சுறாக மாற்றி தனது வாகனமாக்கிக் கொண்டார் என்பது புராணங்களில் கூறப்படுகிறது. எனவே ஆவணி மாத சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால் தீராத வினை தீரும் என்பதும், அனைத்துவிதமான பாக்கியங்கள் நம்மை வந்து சேரும் என்பதும் ஐதீகம்.

விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும் முறை

இந்துக்களால் கொண்டாடப்படும் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. இது ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் கொண்டாடப்படுகிறது

அந்த வகையில் இந்த வருடத்தில் விநாயகர் சதுர்த்தி  செப்டம்பர் 7 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

விநாயகர் சதுர்த்தி தினத்தில் விநாயகரை எப்படி வணங்க வேண்டும் என்று இங்கு பார்ப்போம். 

விநாயகர் சதர்த்திக்கு முந்தைய நாளே வீட்டை நன்றாக சுத்தம் செய்து வீட்டை கழுவ வேண்டும். விநாயகர் சதுர்த்தி நன்னாளில் கடைகளில் வாங்கிய அல்லது களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பூஜை அறைக்கு கொண்டு வர வேண்டும்.

நடப்பாண்டில் விநாயகர் சதுர்த்தியை மதியம் 1 மணிக்குள் பூஜை செய்ய வேண்டும்.(காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை ராகு காலமும், மதியம் 1.30 மணி முதல் மதியம் 3 மணி வரை எமகண்டமும் வருவதால் அந்த நேரத்தில் வழிபடாமல் இருப்பது நல்லது)  பூஜை செய்வதற்கு ஏதுவாக விநாயகர் சிலைக்கு முன்பு வாழை இலையிட வேண்டும்.வாழை இலையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்தை வைக்க வேண்டும்.

பின்னர், விநாயகருக்கு பிடித்த உணவுகளான கொழுக்கட்டை, சுண்டல், பால், தயிர், தேன், அவல், பொறி, லட்டு போன்றவற்றை வைக்க வேண்டும். இவை அனைத்தும் வைக்க இயலாதவர்கள் கொழுக்கட்டை மற்றும் சுண்டல் வைத்தாலே போதும்.

பின்னர், விளாம்பழம், மாதுளை, வாழைப்பழம், கொய்யாப்பழம் ஆகியவற்றை வைக்க வேண்டும்.விநாயகருக்கு மிகவும் உகந்த மாலையாக கருதப்படும் எருக்கம்பூவால் ஆன மாலையை அணிவிக்க வேண்டும்.

விநாயகருக்கு உகந்த அருகம்புல்லை அவருக்கு சூட்டுவதும் சிறப்பானது ஆகும். மாலை அணிவித்து, படையலிட்ட பின்பு தீபாராதனை காட்டி விநாயகரை வணங்க வேண்டும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )