“தமிழ் பொது வேட்பாளர் குறித்து பேச சாணக்கியனுக்கு அருகதை இல்லை”
தமிழ் மக்களை முழுமையாக நேசிக்கும் எல்லோரும் ஒன்றிணைந்து தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று வடமராட்சி வடக்கு கடற்தொழில் கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களின் முன்னாள் உபதலைவரான நா. வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
வடமராட்சியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர், தமிழ்ப் பொது வேட்பாளரை சாணக்கியன் தேவையில்லாமல் விமர்சிக்கக்கூடாது. எங்களின் பிரச்னையை தீர்க்காமல் வைத்துக் கொண்டு எம்மை விற்கிறீர்கள். தென்னிலங்கை கட்சிகளோடு சேர்ந்து நின்று கொண்டு தமிழரை பிரித்தாள்கிறீர்கள். ஆனால், காலப்போக்கில் இதற்கெல்லாம் மக்கள் பதில் செல்வார்கள்.
வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ்மக்கள், புத்தி ஜீவிகள், சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு வந்ததுதான் தமிழ் பொது வேட்பாளர். ஆகவே, தமிழ்ப் பொது வேட்பாளரை விமர்சனம் செய்ய உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை.
கடந்த 15 வருடங்களாக தென்னிலங்கை கட்சிகளுக்கு அடிமையாக இருந்ததை தவிர நீங்கள் சாதித்தது என்ன? தமிழ்ப் பொது வேட்பாளரை ஒன்றிணைந்து நிறுத்திய அரசியல் கட்சிகள் இன்று என்ன செய்கின்றன.
இலங்கையில் இருக்கிற தமிழ் மக்களாக இருக்கலாம், முஸ்லிம்களாக இருக்கலாம் எங்களுக்காக குரல் கொடுக்கும் சிங்கள மக்களாக இருக்கலாம். எல்லோரும் இணைந்து பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும்.
வடக்கு – கிழக்கில் உரிமை கிடைத்து தமிழ் மக்கள் சந்தோசமாக வாழ வேண்டும் என நினைக்கின்ற சிங்கள மக்களும் சங்கு சின்னத்துக்கு நேரே புள்ளடியிட்டு ஆதரவளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.