“பல தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் ஜே.வி.பியினர்”
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் நாட்டைத் திருடியவர்கள், சூறையாடியவர்களைப் பிடித்து சிறையில் அடைப்பார் என்பது உண்மையான விடயம். ஆனால், அவரால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான திட்டங்களையோ அல்லது சர்வதேச ஒத்துழைப்பையோ அவரால் பெற முடியாது.
நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் அவர்கள் சீனாவின் உதவியை நாட வேண்டிய தேவை ஏற்படும். ஏற்கனவே நாடு
சீனாவின் கடன்பொறிக்குகள் சிக்கியுள்ள நிலையில் நாட்டு மக்கள்
அதனை விரும்பமாட்டார்கள். அதுமட்டுமல்ல தேசிய மக்கள் கட்சியினர் சீனாவின் கொள்கைகளுடன் ஒத்துப்போகும் நிலையில் அவர்கள் ஆட்சிக்கு வருவார்களானால் இலங்கைத் தீவின் பிராந்திய அமைதிக்குப் பங்கம் ஏற்படும்.
என்னைப் பொறுத்தவரையில் அநுரவுக்குத் தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் ஏனெனில் வடக்கு, கிழக்கைப் பிரித்தவர்கள், 1983 ஆம்ஆண்டு கலவரத்தின் பின்னணியில் பல தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் ஜே.வி.பியினர். இப்போது அவர்கள் தேசிய
மக்கள் சக்தி என்ற பெயருடன் தேர்தலில் களம் இறங்கியுள்ளனர்.’ என தெரிவித்துள்ளனர்.