“மற்றொரு கோட்டாவிடமிருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்”
‘பதவிகளோ, சலுகைகளோ தேவை கிடையாது, மற்றுமொரு கோட்டாபயவிடமிருந்து இலங்கையை காப்பாற்றுவதே தேவை’ என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக் கோரள தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவினால் உறுதிப்படுத்தப்பட்ட அந்த பயங்கரமான அனுபவத்தை வேறு பெயரில் நாம் நெருங்கக்கூடாது என பாராளுமன்றத்தில்
கடுமையாக வலியுறுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த அவல அனுபவத்தை இந்த நாட்டு மக்களால் மீண்டும் தாங்க முடியுமா? சஜித் பிரேமதாசவுடன் தனிப்பட்ட பிரச்னை எதுவும் இல்லை. ஆனாலும்
தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அவரது அரசியல் பார்வை மற்றும் அவரது வியூகத்தை மிகவும் ஆழமாக ஆராய்ந்த போது பயங்கரமான உண்மையை தான் உணர்ந்ததாகவும் தலதா அத்துக்கோரள சுட்டிக் காட்டினார்.
விசேட ஊடக அறிக்கையொன்றை விடுத்தே தலதா அத்துக்கோரள இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எந்த பதவியும், சலுகையும் வேண்டாம் என்றும், மேற்கூறிய எதிர்கால அபாயங்கள் குறித்து நாட்டுக்கும் மக்களுக்கும் தெரிவிக்க விரும்புவதாகவும் அவர் தனது அறிவிப்பில் விபரித்துள்ளார்.
இது பலருக்கு ஏற்கனவே அறிந்திருந்தும் தமது சொந்த நலனுக்காக தெரியாதது போல் பாசாங்கு செய்வது ஆபத்தான விடயம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர், “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஆபத்தான விடயமொன்றை நான் அண்மையில் நாட்டுக்கு வெளிப்படுத்திய போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக நான் நியமிக்கப்படவுள்ளதாக பல்வேறு ஊடகங்கள் ஊடாக இந்த நாட்களில் அடிக்கடி பரப்பப்பட்டு வருகின்றது.
இது எந்த வகையிலும் யாருக்கு என்ன பதவி என்று விவாதிக்கும் ஒரு சாதாரண சந்தர்ப்பம் அல்ல. மூன்று வாரங்களில் நடக்கவிருக்கும் ஒரு முக்கியமான நிகழ்வு தொடர்பாக முழு நாட்டினதும் கவனம்
செலுத்த வேண்டிய மிக ஆபத்தான விடயத்தை அன்று
நான் வெளிப்படுத்தினேன்.
இது பதவி அல்லது சிறப்புரிமை தொடர்புபட்ட சிறிய விடயம் அல்ல. இதற்கு முன்னர் அமைச்சரவை அமைச்சர் பதவிகள் உட்பட பல பதவிகளை வகித்துள்ள எனக்கு தற்போது எந்த பதவியும் சலுகையும் வேண்டாம். மேற்கூறிய எதிர்கால ஆபத்து குறித்து இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
எனவே, ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஊடக அறிவிப்பை வெளியிடுகிறேன். கோட்டாபயவின் இரண்டாம் பாகம் எப்படி உருவாகி வருகிறது என்பதை நான் உணர்ந்தவுடன், அதை நான் உங்களுக்கு வெளிப்படுத்தினேன்.
நாட்டுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமையை வெளிப்படுத்தி, அதிலிருந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்காக நான் எனது பாராளுமன்ற உறுப்பி னர் பதவியை கூட இராஜினாமா செய்தேன்.
அந்த அவல அனுபவத்தை இந்த நாட்டு மக்களால் மீண்டும் தாங்க முடியுமா? சஜித் பிரேமதாசவுடன் எனக்கு தனிப்பட்ட பிரச்னை இல்லை.
ஆனால் தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அவரது அரசியல் பார்வை மற்றும் அவரது வியூகத்தை ஆராயும் போது நான் உணர்ந்த உண்மை மிகவும் ஆபத்தானது என்பதை உடனடியாக மக்களுக்குச் சொல்ல வேண்டும்.
மீண்டும் இவ்வாறான ஒரு ஆபத்தான நிலைக்கு இந்த நாட்டை யாரும் இழுத்துச் செல்லாமல் எப்படியாவது தடுப்பது எனது பொறுப்பு. இத்தகைய பேரழிவிலிருந்து இந்த நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும்.
எனவே, இந்த ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் வெறும் பிரசார அலைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம்.
நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் ஒரு நாட்டை ஆள முடியுமா என்பதை ஒரு முறை அல்ல பல இலட்சம் முறை யோசனை செய்ய வேண்டும். இது ஒரு தலைமைத்துவ பயிற்சி அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாட்டின் தலைமைக்காக யாரும் முயற்சி செய்ய வேண்டிய நேரம் இதுவல்ல. எனவே, இன்னொரு கோட்டாபயவின் முதிர்ச்சியற்ற நிலைக்கு இந்நாட்டு மக்கள் பலியாகிவிடக் கூடாது.
இன்று பல அரசியல்வாதிகளுக்கு இது பொருந்தாது, ஏனென்றால் அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த நிகழ்ச்சி நிரல்களின்படி செயல்படுகிறார்கள் மற்றும் நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ கவலைப்படுவதில்லை. அதற்கான ஆதாரம் உள்ளது.
எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இனிய பிரசாரங்களை மாத்திரம் கொண்டு நாட்டையும் மக்களையும் ஏமாற்றும் எவருடைய பேச்சையும் செவி மடுக்காமல் எமது நாட்டை நிலையான சமூக பொருளாதார அரசியல் மட்டத்திற்கு உயர்த்தக்கூடிய தலைவரை தெரிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன் – என குறிப்பிடப்பட்டது.