சிறுபிள்ளைத்தனமானவர்கள் நாட்டை நிர்வகிக்கத் தகுதியற்றவர்கள் !

சிறுபிள்ளைத்தனமானவர்கள் நாட்டை நிர்வகிக்கத் தகுதியற்றவர்கள் !

சிறுபிள்ளைத் தனமானவர்களிடம் நாட்டை ஒப்படைத்து, மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொள்ளக் கூடாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனும், கடன் வழங்கிய 18 நாடுகளுடனும் செய்து கொண்ட ஒப்பந்தங்களையும், உடன்படிக்கைகளையும் பாதுகாத்து எதிர்வரும் இரண்டு வருடங்களில் வரிகளைக் குறைக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், ஏற்றுமதித்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் டொலரின் பெறுமதியை 275 ரூபா வரை கொண்டுவர முடியும் என்றும், ஏற்றுமதித் துறையினருடன் பேச்சு நடத்தி, கிரமமாக இந்தப் பணி மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எனவே, சஜித்தும் அநுரவும் இன்று மக்களுக்கு அரசியல் வாக்குறுதிகளை வழங்கி வருவதாகவும், பிள்ளைகளினதும், தங்களதும்எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

ஜா-எல நகரில் நேற்று (30) பிற்பகல் இடம்பெற்ற “இயலும் ஸ்ரீலங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் உரையாற்றுகையில்,

”நெருக்கடியான நேரத்தில் சஜித் பிரேமதாசவிற்கும், அநுரகுமார திஸாநாயக்கவிற்கும் நாட்டைப் பொறுப்பேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.

அவர்கள் வரவில்லை. நாடும், பொருளாதாரமும் வீழ்ந்துவிட்டது. நாட்டை மீட்க முடியாது என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால் நாம் அதனை மீட்டோம். கடினமான தீர்மானங்களை எடுக்க நேரிட்டது. வட் வரியை அதிகரிக்கும் போது இது மிகவும் கடினமான தீர்மானம் என்பதை மக்களுக்கு கூறினோம்.

எம்மைத் திட்டினார்கள். ஆனால் மக்கள் பொறுத்துக் கொண்டனர். அது எனக்குப்போதும். இந்த கடினமான தீர்மானங்களை எடுத்தால் பொருளாதாரத்தை மீட்க முடியும் என்பதை அறிந்திருந்தோம். பொருளாதாரம் வலுப்படும் போது ரூபா வலுப்பெறும். ரூபா வலுப்பெறும் போது உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

இந்தக் காலத்தில் எடுத்த கடினமான தீர்மானங்களை எடுத்ததால் நாம் மீண்டு வந்தோம். இதனால் மக்களுக்கு அஸ்வெசும மூலம் நிவாரணம் வழங்க முடிந்தது. இந்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிந்தது.

இன்னும் எங்களிடம் பணம் இருப்பதால் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 25,000 ரூபாவாக வழங்கவும் தீர்மானித்துள்ளோம். அத்துடன் அடிப்படைச் சம்பளத்தை 55,000 ரூபாவாக நிர்ணயிக்கவும் தீர்மானித்துள்ளோம். பொருளாதாரம் வலுப்பெற்றுவருவதால் இவற்றை செய்ய முடிகின்றது.

இதனை முன்னெடுத்துச் செல்ல ரூபாவை மேலும் வலுப்படுத்த வேண்டும். ரூபா வலுபெறும்போது எங்களுக்கு அதிகமாக பொருட்களைக் கொள்வனவு செய்ய முடியும். டொலரின் பெறுமதியை 275 ரூபா வரை கொண்டுவர முடியும். இதனைவிட குறைத்தால் ஏற்றுமதி துறையினருடன் நாம் பேச்சு நடத்த வேண்டும்.

இதனைக் கிரமாக குறைக்குமாறு சிலர் கூறுகின்றனர். தங்களுக்கு பிரச்சினை இல்லை என்று ஏனையோர் கூறுகின்றனர். ஏற்றுமதித்துறை பாதிக்காத வகையில் இதனை செய்ய வேண்டும். இவற்றையும் பாதுகாத்துக் கொண்டு நாம் முன்நோக்கிச் செல்ல வேண்டும்.

விவசாயத்தையும், மீன்பிடித்துறையும் மேம்படுத்த நிவாரணம் வழங்குவோம். நாட்டில் பிரச்சினை இருந்தால் நாம் பொருட்களின் விலையைக் குறைப்போம் என்று சிலர் கூறுகின்றனர். நிவாரணம் வழங்குவதாக கூறுகின்றனர். நான் அவ்வாறு கூறவில்லை. நாம் நிவாரணம் வழங்குவோம். அந்த நிவாரணங்கள் மூலம் உங்கள் வருமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

உற்பத்தியை அதிகரிக்கவே நிவாரணம் வழங்குவோம். இவ்வாறு நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்ல வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். சாதித்துக் காட்டியவர்கள் என்னுடன் இருக்கின்றனர். முடியாது என்றவர்கள் எதிரணியில் இருக்கின்றனர். அவர்கள் எங்களைத் திட்டுகின்றனர். வருமானத்தை அதிகரிப்பதைப் போலவே தொழில் வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும்.

எமது திட்டத்தின்படி ஒரு லட்சம் சுய தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவோம். பணத்தைப் பயன்படுத்தி பணத்தை சம்பாதிக்கும் வழியை உங்களுக்கு ஏற்படுத்தித் தருவோம். எங்களுக்கு சிறந்த திட்டமொன்று இருக்கிறது.

ஏனையோரின் வேலைத் திட்டத்தையும் ஆராய்ந்து பாருங்கள். 21ஆம் திகதி தேர்தல் முடிவுகளின்படி, 22ஆம் திகதி முதல் இந்த வேலைத் திட்டங்களை ஆரம்பிக்கத் தயாராக இருக்கிறேன். அதன்பின்னர் நிறுத்த முடியாது. நான் பணியாற்ற ஆரம்பித்த பின்னர் எனது அமைச்சர்கள் இரவு பகல் பாராது பணியாற்ற வேண்டும். வரி வலையில் சிக்காத பலர் இருக்கின்றனர். அவர்கள் உள்வாங்கப்படுவார்கள்.

அதன்பின்னர், வரிகளைக் குறைக்க முடியும். அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்த பின்னர், வரிகளைக் குறைக்க முடியும். அடுத்த இரண்டு வருடங்களில் வரிச் சுமை குறைக்க முடியும். இந்த நாட்டின் கல்வித்துறையை மேம்படுத்த வேண்டும். டிஜிட்டல் மயப்படுத்த வேண்டும். ஆனால் இவற்றை செய்ய 5 – 10 வருடங்கள் செல்லும். நான் பொய்களைக் கூற தயார் இல்லை.

தொலைக்காட்சியில் சஜித் பிரேமதாச கதைப்பதைப் பார்த்தேன். 10 ஆயிரம் பாடசாலைகளுக்கு அவர் ஸ்மார்ட் வகுப்பறைகளைக் கொண்டுவருவதாக கூறுகிறார். உலகில் உள்ள 10 ஆயிரம் கோடிஸ்வரர்களை சந்தித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாடசாலையை பொறுப்புக் கொடுப்பேன் என்கிறார்.

ருமேனியாவில் உள்ள கோடீஸ்வரர் ராகமயில் உள்ள பாடசாலையைப் பொறுப்பேற்பாரா என்று கேட்க விரும்புகிறேன். வீழ்ந்துகிடக்கும் ஆர்ஜன்டீனவில் உள்ள கோடிஸ்வரர் ஒருவர் இங்குள்ள பாடசாலையொன்றை பொறுப்பேற்பாரா? இவற்றை செய்ய முடியுமா? 10 ஆயிரம் பாடசாலைகளில் எத்தனை வகுப்பறைகள் இருக்கின்றன. ஒரு இலட்சம் வகுப்பறைகள் என்று வைத்துக் கொண்டால் கணக்கிட்டுப் பாருங்கள். ஒரு ஸ்மார்ட் வகுப்பறைக்கு சுமார் 20 லட்சம் ரூபாசெலவாகும்.

இதனை ஒருஈலட்சத்தால் பெருக்கி பாருங்கள். சஜித் பிரேமதாச சொன்னவுடன் உலகில் உள்ள பணக்காரர்கள் இங்கு படையெடுப்பார்கள் என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறான சிறுபிள்ளைத் தனமானவர்களுக்கு வாக்களிக்க முடியுமா? தூதரங்கள் ஊடாக இவற்றைக் கொண்டுவருவதாகக் கூறுகிறார். இல்லையெனில் தூதுவர்களை பதவி விலக்குவதாக கூறுகிறார்.

எங்களுக்கு 50 தூதரகங்கள்கூட இல்லை. இவ்வாறான நபர்களிடம் எப்படி நாட்டை நிர்வகிக்க முடியும். 2022ஆம் ஆண்டு ஏன் நாட்டைப் பொறுப்பேற்காது தப்பியோடியது ஏன் என்று தற்போது தெரிகிறது. அதனால் யார் உண்மையைப் பேசுகிறார்கள். யார் செயல்கள் மூலம் நிருபித்துள்ளார்கள் என்பதைப் பாருங்கள்.

இது எனது எதிர்காலம் அல்ல. இது உங்களின் எதிர்காலம். காலையில், எழுந்து வரிகளுக்குச் செல்வதா, நடக்கச் செல்வதா என்பதை தீர்மானியுங்கள். உரிய நேரத்தில் மருந்துகளை எடுப்பதா, மருந்துகள் இன்றி மரணிப்பதா என்பதை தீர்மானியுங்கள். மீண்டும் அந்த யுகத்திற்குச் செல்வதா என்பதை மட்டுமே கேட்கிறேன்.

எனவே, உங்களின் எதிர்காலம் குறித்தும், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் சிந்தியுங்கள். என்னிடம் நாட்டை ஒப்படையுங்கள். நான் சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு வழங்குவேன். எனவே, செம்டம்பர் 21ஆம் திகதி கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”என்றார்.

முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன

அன்று நாட்டைப் பொறுப்பேற்ற கோரிய போது சஜித் பிரேமதாச மறுத்துவிட்டார். இந்த நாட்டை நெருக்கடியில் இருந்து மீட்க முடியாது என்றும், ஏதாவது அதிசயம் நடந்தால் மட்டுமே நாட்டைக் காப்பற்ற முடியும் என்றும் சஜித் பிரேமதாச அணியில் இருக்கும் பொருளாதார நிபுணர் என்று கூறும் ஹர்ஷ டி சில்வா கூறியிருந்தார்.

ஆனால் அந்த அதிசயத்தை ரணில் விக்ரமசிங்க நிகழ்த்திக் காட்டினார். சிவில் யுத்தத்தை விட பொருளாதார யுத்தம் கொடுரமானது. இரண்டு, மூன்று வாரங்களில் மக்கள் துன்பப்பட்டனர். ஒரு மாத காலத்திற்குள் நாடு மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டது. ஆனால் மிகக் குறுகிய காலத்திற்குள் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை மீட்டெடுத்துள்ளார்.

நாம் தொடர்ந்து இந்தப் பாதையில் பயணிக்க வேண்டும். நாட்டை மீட்டெடுத்த ரணில் விக்ரமசிங்கவை எந்த வகையிலும் புறக்கணிக்க முடியாது. அதனால் தான் பொது வேட்பாளராக அவரை ஆதரிக்கத் தீர்மானித்தோம்.

வெனிசுவேலாவில் எண்ணெய் வளம் இருந்தும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி திண்டாடுகிறது. லெபனானில் கடந்த பல வருடங்களாக பொருளாதார நெருக்கடி இருக்கிறது. நான்கு மணி நேரம் மட்டுமே மின்சாரம் இருக்கிறது.

கிரேக்கம் கடந்த 10 வருடங்களில் 21 அரசாங்கங்கள் மாறியுள்ளன. புதிய அரசாங்கம் வந்து தோல்வியடையும் போது மக்கள் விரட்டியடிக்கின்றனர். அவர்களுக்கு பொருளாதாரத்தை கையாள்வதில் பாரிய பிரச்சினை இருக்கிறது. எத்தியோப்பியா, சிம்பாப்வே போன்ற நாடுகளிலும் இந்த நிலையே இருக்கிறது. இவ்வாறு நெருக்கடியில் சிக்கிய எந்தவொரு நாடும் மீண்டு வரவில்லை.

இலங்கை மட்டுமே இந்த நெருக்கடியில் இருந்து மிகக் குறுகிய காலத்தில் மீண்டுவந்துள்ளது.. அதற்கு ரணில் விக்ரமசிங்கவே காரணமாகும். இதற்கு மனசாட்சியுள்ள மக்களாக அவருக்கு நன்றி கடனாக வேறொரு தீர்மானத்தை எடுக்க முடியாது. வரும் 21ஆம் திகதி அவரது சின்னமான கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து அடுத்த ஐந்து வருடங்கள் அவரிடம் நாட்டை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த:

‘அன்று ஆட்சியைப் பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. அன்று ரணில் விக்ரமசிங்கவின் வீடும் தீயிட்டு எரிக்கப்பட்டது. ஆனால் அவர் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முன்வந்தார். அவருக்கு பதவியேற்றக் கூட ஒரு இடம் இருக்கவில்லை. இன்று இரண்டு வருடங்களில் பொருளாதாரத்தை மீட்டுள்ளார்.

அன்று கட்டுக்கடங்காமல் உயர்ந்து சென்ற பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தினார். அன்றிருந்த விலைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இன்று விலைகள் குறைந்துள்ளன.

வெளிநாட்டு அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரித்துள்ளார். ஆனால் இன்று ஆட்சிக்கு வர முயற்சிக்கும் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் இந்த முயற்சிகளை தோற்கடிக்க முயற்சித்தன. பல்கலைக்கழக மாணவர்களை வீதிக்கு அழைத்து வந்தனர். ஆசிரியர்களை சுகயீன லீவு போராட்டம் நடத்த அழுத்தம் கொடுத்தனர்.

சம்பள முரண்பாடுகளை முன்வைத்து வீதிகளுக்கு வந்து போராட்டம் நடத்தினார்கள். இன்று அவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிடவில்லை. ரணில் விக்ரமசிங்க இதற்கான தீர்வை வழங்கியுள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என்று தேர்தல் கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளோம். அதனால் சம்பள முரண்பாட்டைத் தீர்த்து, சம்பளம் அதிகரிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தபால் மூலம் வாக்களிக்கவுள்ள அரச ஊழியர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் செப்டம்பர் 21ஆம் திகதி சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களித்து சம்பள அதிகரிப்பை உறுதிசெய்துகொள்வதுடன் வரி குறைப்பையும் உறுதி செய்து மக்கள் தங்களின் வாழ்க்கை மேலும் வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்றார்.

முன்னாள் ஹரீன் பெர்னாண்டோ:

”இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மும்முனைப் போட்டி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இம்முறை, நாட்டை காப்பாற்றிய தலைவருக்கும், தன் தலையைக் காத்துக் கொண்ட தலைவர்களுக்கும் இடையேதான் இம்முறை போட்டியிருக்கிறது. அன்று மக்கள் அனைத்திற்கும் அல்லாடிக் கொண்டிருந்தனர். நல்ல வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்தவர்கள் கூட இவ்வாறு அல்லாடிக் கொண்டிருந்தனர்.

அதனால் எதிர்வரும் 21ஆம் திகதி நடக்கும் தேர்தல் நாட்டைக் காப்பற்றிய தலைவருக்கும், தங்களைக் காப்பாற்றிக் கொண்ட தலைவர்களுக்கும் இடையிலான போட்டி என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எந்த இடத்தில் இருந்தாலும் இம்முறை ரணில் விக்ரமசிங்கவிற்கே வாக்களிக்க வேண்டும். ஜே.வி.பி வெற்றிக் கனவில் இருக்கின்றனர்.

ஆனால் அநுர குமார அமைச்சரவையில் யார் இருப்பார்கள்? நிதியமைச்சர் யார்? கல்வி அமைச்சர் யார்? என்பதை சிந்தித்துப் பாருங்கள். அன்று இருந்த வரிசை யுகத்திற்கு தீர்வு கண்டு மூன்று மாதங்களில் மக்களின் இயல்வு வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவந்தார். அன்று ஒரு சுற்றுலாப் பயணி வரவில்லை. விமான நிலையம் வொறிச்சோடியிருந்தது. இன்று விமான நிலையத்தைப் பாருங்கள்.

சுற்றுலாப் பயணிகள் நிரம்பி வழிகின்றனர். இத்தனையும் நடந்தும் ஏன் மீண்டும் பரீட்சித்துப் பார்க்க வேண்டும். ஒரு முறை பரீட்சித்துப் பார்த்து, இரவு விழுந்த குழியில் பகலில் விழக்கூடாது. உங்களின் பிள்ளைகளுக்காக சிந்தித்து செயல்படுமாறு கூப்பிட்டுக் கேட்டுக்கொள்கிறேன். இன்று அனுபவம் உள்ள தலைவர் ஒருவர் தேவைப்படுகிறார். நீங்கள் சரியான தீர்மானத்தை எடுக்காவிட்டால் நீங்கள் மிகவும் துன்பப்படவேண்டியிருக்கும். ஆறு மாதங்களில் மீண்டும் வரிசைகளுக்குச் செல்ல நேரிடும்.” என்றார்.

அமைச்சர் நளின் பெர்னாண்டோ:

”பொருளாதாரத்தில் வீழ்ந்த நாட்டை இரண்டு வருடங்களில் ரணில் விக்ரமசிங்க கட்டியெழுப்பினார். இதனை சஜித் பிரேமதாசவிற்கும், ஜே.வி.பி.க்கும் ஞாபகப்படுத்துகிறோம். நாம் இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். எமது மக்கள் புத்திசாதுர்யமானவர்கள். பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அவர்களை ஏமாற்ற முடியாது. நாம் நன்றி மறவாத மக்கள். அதனால் ரணில் விக்ரமசிங்கவின் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல மக்கள் ஒத்துழைக்க வேண்டும். இதற்கமைய செப்டம்பர் 21ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்க வேண்டும்.” என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா:

வீழ்ந்த நாட்டை இரண்டாண்டுகளில் மீட்டவர் யார்? அதுதான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க. நாடு வீழ்ந்தபோது அநுரவுக்கும் சஜிதிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் வந்தார்களா.ரணில் விக்ரமசிங்க தான் முன்வந்தார். அதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நினைவில் வைத்து நன்றியுடன் இருங்கள். எரிபொருள், எரிவாயு, உரம், மருந்து என எதுவுமே இல்லாமல் இருந்த போது நமக்காக யார் முன்வந்தார்கள் என்பதை நினைவுகொள்ளுங்கள்.
நாடு மீண்டும் வீழ்ந்தால் மீண்டும் பழைய நிலைக்கு செல்வதை யாராலும் தடுக்க முடியாது. சஜித்தும் அநுரவும் நாட்டைக் காப்பாற்ற முன்வரவில்லை. இன்று சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எரிபொருள், எரிவாயு, மருந்து நிறையவே உள்ளன. இன்று பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

நாட்டை மீட்க அனுபவமும் திறமையும் இருக்க வேண்டும். அனுரகுமாரவிற்கு மற்றவர்களை விமர்சிக்க மட்டுமே முடியும்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )