‘போலியோ தடுப்பூசி’ வழங்குவதற்காக காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம்

‘போலியோ தடுப்பூசி’ வழங்குவதற்காக காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம்

காசாவில் போலியோ தடுப்பு மருந்து வழங்குவதற்காக மானிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இணங்கியதாக உலக சுகாதார
அமைப்பு அறிவித்துள்ளது.

எனினும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் மூன்றாவது நாளாக இஸ்ரேலின் படை நடவடிக்கை நேற்று (30) நீடித்ததோடு காசாவிலும் தாக்குதல்கள் தொடர்ந்தன.

காசா முழுவதும் சுமார் 640,000 குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையை உலக சுகாதார அமைப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கவிருப்பதாக அந்த அமைப்பின் மூத்த அதிகாரி ரிக்பீபர்கோன் தெரிவித்துள்ளார்.

காசா பகுதியில் மத்திய, தெற்கு மற்றும் வடக்கு என மூன்று கட்டங்களில் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த ஒவ்வொரு கட்டத்தின்போதும் உள்ளூர் நேரப்படி காலை 6.00 மணி தொடக்கம் மாலை 3.00 மணி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மோதல்கள் நிறுத்தப்படும்.

காசாவில் கடந்த 25 ஆண்டுகளின் பின்ன முதல் முறையாக போலியோ சம்பவம் ஒன்று பதிவானதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி சுமார் 1.26 மில்லியன் வாய்வழி போலியோ தடுப்பு மருந்துகள் ஏற்கனவே காசாவை சென்றடை ந்திருப்பதோடு மேலும் 400,000 மருந்துகள்
விரைவில் அங்கு அனுப்பப்படவுள்ளன.

இந்தத் தடுப்பு மருந்துகளை ஐ.நா. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மருத்துவ பணியாளர்கள் வழங்கவுள்ளனர்.

இதற்காக 2,000 இற்கும் அதிகமான சுகாதார மற்றும் சமூக நலன்புரி பணியாளர்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர்.

அப்துல் ரஹ்மான் அபூ அல்ஜித்யா என்ற குழந்தையே காசாவில் போலியோ தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்தக் குழந்தை நாளை (01) ஒரு வயதை எட்டவுள்ளது.

சிறிய அளவிலேயே குழந்தைக்கு உதவ முடியும் என்று சுகாதார அதிகாரிகள் கூறிய நிலையில் குழந்தையின் தாய் நிவின் அபூ அல் ஜிதையான் அச்சமடைந்துள்ளார்.

‘போர் மற்றும் எல்லைக்கடவைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் எனது மகனுக்கு நோய் தொற்றியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.போதிய மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில் இது எனக்கு பேரதிர்ச்சி தந்தது. அவன் இது போன்றே இருந்து விடுவானா?’ என்று அவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கேள்வி எழுப்பினார்.

‘அவன் எனது ஒரே மகன். அவன் சிகிச்சையை பெறுவதும் நடப்பதும் முன்னர் போல் செயற்படுவதும் அவனின் உரிமை. கவனிப்பாரற்று கூடாரத்தில் தங்கி இருப்பது நியாயமற்றது’ என்றும் அவர் கூறினார்.

ஐ.நா. மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு ஆதரவு வழங்குவதாக ஹமாஸ் கூறியது. எனினும் இந்த புதிய நடவடிக்கை ஓர் போர் நிறுத்த மல்ல என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதன்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

‘இது போலியோ தடுப்பூசி வழங்குவதற்கான போர் நிறுத்தம் ஒன்றல்ல, ஆனால் காசாவின் குறிப்பிட்ட பகுதிகள் அதற்காக ஒதுக்கப்படுகிறது’ என்று நெதன்யாகுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

போலியோ தொற்று கழிவு நீர் மற்றும் அசுத்தமான நீரில் இருந்து பரவக்கூடியதாகும்.

கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் காசா போரினால் அங்கு பெரும்ப
குதி இஸ்ரேலின் தாக்குதல்களால் சின்னபின்னமாக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தத் தொற்று பரவுவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

பிரதானமாக ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கே இந்த நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இது குறைபாடுகள் மற்றும் பக்கவாதத்தை ஏற்படுத்தும் என்பதோடு உயிராபத்
தையும் ஏற்படுத்தக்கூடியதாகும்.

காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் பற்றிய அறிவிப்பு வெளியானபோதும் அங்கும் பலஸ்தீன போராளிகள் மற்றும் இஸ்ரேலிய படையினருக்கு இடையிலான மோதல்கள் நீடித்து வருவதோடு நேற்றுக் காலை இடம்பெற்ற தாக்குதல்களில் அங்கு 20 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இதேவேளை கடந்த பல வாரங்களாக கடும் படை நடவடிக்கையை முன்னெடுத்த இஸ்ரேலிய துருப்புகள் தெற்கு காசாவின் கான் யூனிஸ்நகரில் இருந்து வாபஸ் பெற ஆரம்பித்திருப்பதாக அங்கிருந்து வரும்செய்திகள் தெரிவிக்கின்றன.

படையினர் வாபஸ் பெற்ற இடங்களில் இருந்து மீட்பாளர்கள் ஒன்பது சடலங்களை மீட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல்களில் கான் யூனிஸில் பெரும் அழிவுகள் ஏற்பட் டிருப்பதோடு கட்டடங்கள், வீதிகள் மற்றும் உட்கட்டமைப்புகள் சேதமாக்கப்பட்டிருப்பதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காசாவில் தொடரும் தாக்குதல்களில் இதுவரை 40,600க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு 93,800க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேநேரம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலியப்படை கடந்த இரண்டு தசாப்தங்களில் நடத்தும் பாரிய இராணுவ நடவடிக்கை மூன்றாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

இதன்போது ஜெனின் நகரின் தெற்காக சபப்தே கிராமத்தில் கார் ஒன்றை இலக்கு வைத்துஇஸ்ரேல் நேற்றுக் காலை நடத்தியவான் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்புப் படையினருடனான மோதலை அடுத்து பயங்கரவாத குழு ஒன்றை இலக்கு வைத்து வான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

இந்தத் தாக்குதலால் கார் தீயில் கறுகி இருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது ஜெனினுக்கான ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல்
குறிப்பிட்டுள்ளது.

ஜெனினில் இஸ்ரேலியப் படையுடன் கடுமையாக சண்டையிட்டு வருவதாக பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாம் அமைப்பின் ஆயுதப்பிரிவான அல் குத்ஸ் படைப்பிரிவு நேற்று தெரிவித்தது.

துல்கர்ம் நகர் மற்றும் இரு அகதி முகாமில் 48 மணி நேர சுற்றிவளைப்பை மேற்கொண்ட இஸ்ரேலியப் படை கடந்த வியாழக்கிழமை இரவு அங்கிருந்து வாபஸ் பெற்றுள்ளது.

இங்கு இடம்பெற்ற படை நடவடிக்கையில் நான்கு பேர் கொல்லப்பட்டதோடு பொதுமக்களின் சொத்துகள் மற்றும் உட்கட்டமைப்புகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்தும் இராணுவ நடவடிக்கையில் இதுவரை 19க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கனவே காசாவில் போர் நீடித்து வரும் நிலையில் மேற்குக் கரையிலும்
இஸ்ரேல் நடத்தும் இராணுவ நடவடிக்கை குறித்து சர்வதேச அளவில் கவலை வெளியாகி உள்ளது.

இது குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் சீனா கண்டனத்தை வெளியிட்டுள்ளது. ‘பூமியில் மற்றொரு நரகமாக மேற்குக் கரையை மாற்றும் வகையில் காசாவின் மனிதாபிமான பேரழிவு போன்று மேற்குக் கரையிலும் ஏற்படுத்துவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்று அது தெரிவித்துள்ளது.

காசா போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் முயற்சியாக எகிப்து தலைநகர் கட்டாரில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்த நிலையில் இஸ்ரேலிய பிரதிநிதிகள் அங்கிருந்து இஸ்ரேல் திரும்பியதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் இந்தப் பேச்சுவார்த்தை எந்த முன்னேற்றமும் காண தவறி இருப்பதாக தெரியவருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )