போர் குற்றம், மனித உரிமை மீறலில் ஈடுபட்டோரை தண்டிக்க மாட்டோம்
நாட்டில் 26 வருடகாலம் நீடித்த உள்நாட்டு போரில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல் போர் குற்றங்களுக்கு உள்ளான எவரையும் எமது நிர்வாகம் தண்டிக்க முயலாது என அநுரகுமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், பொறுப்புக்கூறல் உண்மையை கண்டறியும் விதத்தில் மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் கூட எவரும் தண்டிக்கப்பட வேண்டுமென்று விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் ‘அசோசியேற்றட் பிறஸ்’ (ஏ. பி.) செய்தித்தளத்துக்கு அளித்த நேர்காணலிலேயே அவர் மேற்கண்ட விடயங்களை தெரிவித்தார்.
அதில் அவர் தெரிவித்த முக்கிய அம்சங்கள் மட்டும் வருமாறு,
‘மக்கள் விரும்பும் மாற்றமாக எனது நிர்வாகம் காணப்படும். ஊழலற்ற சமூகத்தில் சிறப்பான பொருளாதாரத்தையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்து பேசுவோம் , அதனுடனான உடன்படிக்கையை தொடர்ந்தும் முன்னெடுப்போம். நாடு நிதி ரீதியாக வீழ்ச்சியடைந்ததாலேயே ஐ. எம். எவ்வுடன் உடன்படிக்கையை செய்தோம். இதனால், அதிலிருந்து நாம் வெளியேற முடியாது.
பொது மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி குறித்து கவனம் செலுத்துவோம். மனித உரிமைகள் மீறல் மற்றும் போர் குற்றங்களை விசாரிப்பதிலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடம் உடன்பாட்டை பெறுவதிலும் நாம் கவனம் செலுத்துவோம்.
பொறுப்புக் கூறல் உண்மையை கண்டறியும் விதத்தில் மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டும். எவரையும் பழிவாங்கும் விதத்தில் அல்லது எவரையும் குற்றஞ்சாட்டும் வகையில் இருக்கக்கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் கூட எவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்பவில்லை , அவர்கள் என்ன நடந்தது என்று அறியவே விரும்புகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.