நல்லூர் தீர்த்தத்துக்கு விடுமுறை கோரிக்கை
நல்லூர் தீர்த்த தினமான செப்டெம்பர் 2ஆம் திகதியன்று, விடுமுறை வழங்குமாறு சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.
மீன்பிடி மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரிடமே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை நாட்டில் இலங்கை வாழ் மக்கள் மட்டுமல்ல, உலக வாழ் இந்துக்களும் நல்லூர் திருவிழாவில் கலந்து தங்களது பக்திபூர்வமான வேண்டுதலைச் செய்து வருகின்றார்கள்.
இந்நிலையில் 25 நாட்களாக விரதம் இருந்து நல்லூர் முருகனை மனம் உருகி வேண்டி நிற்கும் பக்தர்கள் செப்டெம்பர் 2ஆம் திகதி தீர்த்த உற்சவத்துடன் தங்களது விரதத்தினை பூர்த்தி செய்து கொள்வார்கள்.
இந்த விரத பூர்த்தி தினமான தீர்த்த தினத்தை யாழ். மாவட்டத்தினருக்கு, பாடசாலை உட்பட அரச ஊழியர்களுக்கு குறிப்பாக இந்துக்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்றே கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இந்த கோரிக்கையின் பிரதிகள் வடமாகாண தலைமைச் செயலாளர் எல்.இளங்கோவன், யாழ். கல்வி அமைச்சின் செயலாளர் எம்.பற்றிக் டிறஞ்சன், எம்.பிராதீபன் மாவட்டச் செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .
மேலும், நல்லூர் திருவிழாவானது இலங்கை நாட்டின் ஒரு தேசிய திருவிழாவாகச் சகல இன மக்களாலும் பக்திபூர்வமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், இந்த தீர்த்த திருவிழா அன்று புண்ணிய விருதத்தைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக அத்தினத்தை விடுமுறை தினமாக அறிவித்தால் இந்து மக்கள் நன்றி உடையவர்களாக இருப்பார்கள் எனவும் குறித்த கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.