வடக்கு, கிழக்கில் நடந்த படுகொலைகளுக்கு நீதி !

வடக்கு, கிழக்கில் நடந்த படுகொலைகளுக்கு நீதி !

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி நீதியை நிலை நாட்டுவோம்’ – இவ்வாறு அநுரகுமார திஸநாயக்கவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியா உட்பட பிராந்திய நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த இலங்கையை தளமாகப்பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் – என்றும்
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுரகுமாரதிஸநாயக்க தனது தேர்தல விஞ்ஞாபனத்தை ‘வளமான நாடு அழகான வாழ்க்கை’ எனும் தொனிப் பொருளில் நேற்று கொழும்பில் வெளியிட்டார்.

அதில் தெரிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு,

இனவாதம் மற்றும் மதத் தீவிரவாதத்தால் இடம்பெற்றுள்ள வன்முறை சம்பவங்களை புலன்விசாரணை செய்வதற்கான உண்மை மற்றும் மீளிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் செயல்பாடு விரிவாக்கப்படும்.

மதங்களிடையேயான மோதல்களை தவிர்க்க மதத் தலைவர்கள், கல்விமான்கள் இணைந்த சர்வமதப் பேரவை நிறுவப்படும்.

தேசிய மற்றும் மத ஐக்கியத்துக்கான கலாசார நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை தேசிய, மாகாண மற்றும் மாவட்ட மட்டத்தில் ஏற்படுத்தப்படும்.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதுடன், அவர்கள் சுதந்திரமாக சமூகமயமாதலை உறுதிப்படுத்துவோம்.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைசார் அனைத்து சட்டங்களையும் ஒழித்து அனைத்து மக்களினதும் சுதந்திரம் உறுதி செய்யப்படும்.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பிரதேசங்களிலும் மக்களின் சிவில் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையிலான சிவில் நிர்வாகம் முறைமைப்படுத்தப்படும்.

போரில் விதவைகளானோர், அநாதைகள் மனஅழுத்தங்களுக்கு உள்ளானவர்களுக்கு மானிய உதவிகள் வழங்கப்படும்.

இனக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் குறிக்கோளுடன் மேற்கொள்ளப்படும் மக்கள் குடியேற்றங்களை நிறுத்துதல். காணிகள் மற்றும் வாழ்விடங்கள் பற்றிய தேசிய ஆணைக்குழு ஒன்றின் ஊடாக நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.

அரசமைப்பின் 16ஆவது திருத்தத்தின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசியமொழிக் கொள்கையை அவசியமான வளங்கள் மற்றும் தொழில்நுட்பவசதிகளைப் பெற்றுக் கொடுத்து நடைமுறைப்படுத்தப்படும்.

அனைத்துப் பிரஜைகளும் தமது மொழியில் சேவைகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான தேசிய மொழிக்கொள்கை அமுலாகும்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கூடுதலாக வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பொலிஸ் நிலையங்கள், அரச பணிமனை போன்ற சிவில் சேவைகள் நிலவும்இடங்களில் தமிழ் மொழியில் பணிகளை ஆற்றக்கூடிய உத்தியோகத்தர்கள்,
பணியாளர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்படுவர்.

மலையகத் தமிழ் மக்களின் அடையாளத்தையும் உரிமைகளையும் ஏற்றுக்கொண்டு அவர்களின் காணி, வீடமைப்பு, கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகளை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மலையக தமிழ் சமுதாயத்தின் சம்பளத்தை வாழ்க்கை செலவுக்கு ஏற்றவகையில் அதிகரித்தல். மக்கள் கௌரவமான வருமானத்தை பெறுவதற்குள்ள உரிமையை உறுதிப்படுத்துதல்.


வடக்கு, கிழக்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களின் கடற்றொழில் நடவடிக்கைகளில் வெளிநாட்டு மீனவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள சவால்களை இராஜதந்திர ரீதியாக தீர்த்து, அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளையும் விற்பனை வசதிகளுக்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்
ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )