ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி ?
‘வாக்கு’ என்பது மக்களுக்குரிய ஜனநாயக உரிமையாகும். அந்த ஜனநாயக கடமையை சரிவர நிறைவேற்ற வேண்டியது வாக்காளர்களின் கடமையாகும்.
நாம் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதில் அக்கறைக்காட்டும் அதேவேளை, அந்த வாக்கை சரியாக அளிப்பது பற்றியும் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.
இலங்கையில் எழுத்தறிவு வீதம் திருப்தியடையக்கூடிய நிலையில் இருந்தாலும், தேர்தல்களில் சரியாக – முறையாக வாக்களிப்பது எப்படி என்பது தொடர்பில் பல விழிப்புணர்வு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், நிராகரிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவது கவலைக்குரிய விடயமாகும்.
இலங்கையில் 1982 ஒக்டோபர் 20 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது, அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில், 1.22 சதவீத வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் – 8,145,015
அளிக்கப்பட்ட வாக்குகள் – 6,602,617
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 80,470
செல்லுபடியான வாக்குகள் – 6,522,147
1988 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் 1.76 சதவீத வாக்குகளும், 1994 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 1.97 சதவீத வாக்குகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
1999 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 2.31 சதவீத வாக்குகளும், கடைசியாக 2019 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது 0.85 சதவீத வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
எனவே, ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு சரியாக வாக்களிக்க வேண்டும் என்பது பற்றி அறிந்துகொள்வோம்.
நீங்கள் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் வாக்களிக்க விரும்பினால், அவரது சின்னத்துக்கு முன்னால் என ‘X’ புள்ளடி இடலாம். அவ்வாறு இல்லாவிட்டால் 1 என குறிப்பிடலாம். அது செல்லுபடியான வாக்காக ஏற்றுக்கொள்ளப்படும்.
2 மற்றும் 3 ஆம் விருப்பு வாக்குகளைப் பயன்படுத்த விரும்பினால்,
நீங்கள் முதலில் விரும்பும் வேட்பாளருக்கு முன்னால் அதாவது குறித்தொகுக்கப்பட்டுள்ள பகுதியில் 1 எனவும், 2ஆவது விரும்பும் வேட்பாளருக்கு முன்னால் குறித்தொகுக்கப்பட்ட இடத்தில் 2 எனவும், 3 ஆவது விரும்பும் வேட்பாளருக்கு முன்னால் 3 எனவும் பதிவிடலாம்.
A – 1
B – 2
C – 3
முதல் விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு முன்னால் X என அடையாளம் இட்டுவிட்டு, ஏனைய இருவருக்கு 2,3 என பதிவிட்டிருந்தால் அந்த வாக்கு நிராகரிக்கப்படும்.
A – X
B – 2
C – 3
அதேபோல மூவருக்கும் Xஎன அடையாளமிட்டாலும் அந்த வாக்கு செல்லுபடியற்ற வாக்காகவே கருதப்படும்.
A – X
B – X
C – X
இலங்கையில் இதுவரை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களின்போது முதல்சுற்று வாக்கெண்ணும் பணியின்போதே வேட்பாளர் ஒருவர் 50.1% வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். இதனால் 2ஆவது விருப்பு வாக்கு எண்ணும் நடவடிக்கை இதுவரை இடம்பெற்றதில்லை.
எனினும், இம்முறை இம்முனை போட்டி நிலவுவதால் 2 ஆம் விருப்பு வாக்கு பற்றியும் அதிகம் பேசப்படுகின்றது.
செல்லுபடியான மொத்த வாக்குகளில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் முதல் சுற்றில் 50.1 சதவீத வாக்குகளைப் பெறாவிட்டால் வெற்றி எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்பது பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.
எனவே, விருப்பு வாக்குகளைப் பயன்படுத்துவதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால் நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு அல்லது என குறிப்பிட்டாலே போதும்.