ஹிஸ்புல்லா–இஸ்ரேல் பரஸ்பரம் பாரியதாக்குதல்கள் : போர் பதற்றம் அதிகரிப்பு

ஹிஸ்புல்லா–இஸ்ரேல் பரஸ்பரம் பாரியதாக்குதல்கள் : போர் பதற்றம் அதிகரிப்பு

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு நேற்று (25) நூற்றுக்கணக்கான ரொக்கெட் குண்டுகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் சரமாரி தாக்குதல் நடத்தியதோடு மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை தடுப்பதற்கு சுமார் 100 போர் விமானங்கள் மூலம் லெபனான் மீது தாக்குதல் தொடுத்ததாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 10 மாதங்களுக்கு மேலாக எல்லையில் இடம் பெற்று வரும் பரஸ்பர தாக்குதல்களில் மிகப்பெரிய மோதலாக இது உள்ளது.

இரவு வானில் நெருப்புப் பந்தாக ஏவுகணைகள் ஊடுருவிச் செல்வது தெரிந்த
தோடு இஸ்ரேலில் வான் தாக்குதல் எச்சரிக்கையாக சைரன் ஒலி எழுப்பப்பட்டு தொலைவில் குண்டு சத்தங்களும் கேட்ட வண்ணம் இருந்ததாக பார்த்தவர்கள் விபரித்துள்ளனர்.

தெற்கு லெபனானில் கையாமிலுள்ள வீடுகளுக்கு மேலால் கறும்புகை எழுந்தன.

இந்த தாக்குதல்களில் முழு சேத விபரமும் உடன் உறுதி செய்யப்படாத நிலையில்
தாக்குதலை தொடரும் திட்டமில்லை என்று ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளது.

மறுபுறம் முழு அளவில் போர் ஒன்றை நாடவில்லை என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

வடக்கு இஸ்ரேலில், சைரன் ஒலி எழுப்பப்பட்டதோடு பல இடங்களிலும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன.

இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பான அயர்ன் டோம் அமைப்பு தெற்கு லெபனானில் இருந்து வந்த ரொக்கெட் குண்டுகளை சுட்டு வீழ்த்தியது.

நாடு முழுவதும் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலின் அம்புலன்ஸ் சேவை குறிப்பிட்டுள்ளது.

காசா போருக்கு இணையாக இடம்பெறும் இந்த மோதல் தீவிரம் அடையும் பட்சத்தில் அது ஹிஸ்புல்லா ஆதரவு ஈரான் மற்றும் இஸ்ரேல் ஆதரவு அமெரிக்காவும் தொடர்புபட்ட பிராந்திய போர் சூழல் ஒன்று ஏற்படுத்தும் அச்சுறுத்
தல் நீடித்து வருகிறது.

ஹிஸ்புல்லா மூத்த தளபதி புவாத் ஷுக்ர் கடந்த மாதம் படுகொலை செய்யப்பட்டதற்கு முதல் கட்டபதில் நடவடிக்கையாகவே இஸ்ரேல் மீது இந்தத் தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்போது 11 இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேலை நோக்கி 320 கட்யூஷா ரொக்கெட்டுகளைக் கொண்டு தாக்கியதாக ஹிஸ்புல்லா தெரிவித்தது.

மறுபுறம் ஹிஸ்புல்லா பாரிய தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வருவதை பதிப்பிட்டு 100 போர் விமானங்களை பயன்படுத்தி தெற்கு லெபனானில் உள்ள 40இற்கும் அதிகமான ஹிஸ்புல்லா ரொக்கெட் ஏவு தளங்களை தாக்கி அழித்ததாகவும் பாரிய தாக்குதல் ஒன்றை முறியடித்ததாகவும் இஸ்ரேல் இராணுவம் கூறியது.

இந்தத் தாக்குதல்கள் மூலம் ஆயிரக்கணக்கான ரொக்கெட் ஏவு கருவிகளை அழித்ததாக இஸ்ரேல் கூறியது.

பெரும்பாலான தாக்குதல்கள் வடக்கு லெபனானில் நடத்தப்பட்டதோடு மத்திய லெபனானும் இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலின் கூற்றை நிராகரித்திருக்கும் ஹிஸ்புல்லா, திட்டமிட்டபடி தாக்குதல்களை நடத்தியதாகவும் ஷுக்ரின் படுகொலைக்கு தமது பதில் நடவடிக்கை வேறு ஒரு தினத்தில் மீண்டும் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

நேற்றுக் காலை இஸ்ரேல் அமைச்சரவை அவசரமாகக் கூடியது.

பாதுகாப்பு அமைச்சர் யொவ் கல்லன்ட் அவசர நிலையை அறிவித்ததோடு களத்தில் உள்ள நிலைமைக்கு ஏற்ப இஸ்ரேல் பதில் நடவடிக்கை எடுக்கும் என்றும் முழு அளவில் போர் ஒன்றை நாடவில்லை என்றும் வெளியுறவு அமைச்சர் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

டெல் அவிவின் பென் கூரியன் விமானநிலையத்தில் இருந்து விமானங்கள் செல்வது மற்றும் வருவதும் சுமார் 90 நிமிடங்கள் இடைநிறுத்தப்பட்டன.


‘எமது நாட்டின் பாதுகாப்புக்கும் வடக்கில் வசிப்பவர்களை பாதுகாப்பாக தமது வீடுகளுக்கு அனுப்புவதற்கும், யார் எமக்கு தீங்கு செய்கிறார்களோ அவர்களுக்கு நாம் தீங்கு செய்வோம் என்ற சாதாரண விதியை பின்பற்றி எமது நாட்டின் பாதுகாப்புக்கு
முடிந்த அனைத்தையும் செய்ய நாம் உறுதியாக உள்ளோம்’ என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

லெபனான் இடைக்கால பிரதமர் நஜிப் மிகாதி, தேசிய அவசரக் குழு அமர்வு ஒன்றில் அமைச்சரவை அமைச்சர்களை சந் தித்தார். ஹிஸ் புல்லா தலைவர் செய்யிது ஹசன் நஸ்ரல்லா நேற்று மாலை தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தி இருந்தார்.

தாக்குதல்களை நிறுத்தும்படி லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படை மற்றும் ஐ.நா. விசேட ஒருங்கிணைப்பு அலுவலகம் அனைத்து தரப்புகளுக்கும் அழைப்புவிடுத்திருப்பதோ டு நிலைமை குறித்து கவலை வெளியிட்டுள்ளன.

கெய்ரோவில் மீண்டும் ஆரம்பமான காசா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாத சூழலில் காசாவில் மோதல்கள் மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன.

போர் நிறுத்த முன்மொழிவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே உள்ள இடை
வெளியை நீக்கும் சமரச முயற்சியாகவே நேற்று முன்தினம் (24) கெய்ரோவில் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

எனினும் பலமணி நேரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படவில்லை என்று பேச்சுவார்த்தையுடன் தொடர்புபட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

“கொய்ரோ பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை.பிலடெல்பியா தாழ்வாரத்துடன் சேர்த்து எட்டு நிலைகளில் தொடர்ந்து நிலைகொள்ள இஸ்ரேல் உறுதியாக உள்ளது”

என்று இந்தப் பேச்சுவார்த்தையுடன் தொடர்புடைய பலஸ்தீன அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

காசாவின் மனிதாபிமான நிலைமை மோசமடைந்து ஊட்டச்சத்து குறைபாடுஅதிகரித்து, அங்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையிலேயே கெய்ரோ பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளது.

எனினும் காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான் மற்றும் தரைவழி தாக்குதல்களில் 71 பேர் கொல்லப்பட்டு மேலும் 112 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் கடந்த 10 மாதங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 40,405 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 93,468 பேர் காயமடைந்துள்ளனர்.

மத்திய காசாவின் டெயிர் அல் பாலாஹ்வில் இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது எட்டுப்பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொல்லப்பட்டதாக காசா மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றை நடத்திய பின்னர் இஸ்ரேலிய போர் விமானங்கள் பாரிய குண்டு ஒன்றை வீசியதாக பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் அல் ஹெக்கர் குடும்ப வீட்டின் மீது இடம்பெற்ற தாக்குதலிலேயே அந்த குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் பிரதிநிதிகள் மற்றும் எகிப்து,கட்டார், அமெரிக்க மத்தியஸ்தர்கள் இடையே பேச்சுவார்த்தை ஆம்பிக்கப்பட்ட நிலையில் முன்மொழியப்படும் யோசனைகளை மீளாய்வு செய்வதற்காக ஹமாஸ் பிரதிநிதிகளும் கடந்த சனிக்கிழமை கெய்ரோ சென்றிருந்தனர்.

அமெரிக்க பேச்சுவார்த்தையாளர்கள் எகிப்து பிரதிநிதிகளை சந்தித்ததோடு தொடர்ந்து எகிப்து மற்றும் கட்டார் பிரதிநிதிகளை சந்தித்ததாகவும் அதனைத் தொடர்ந்து எகிப்து மற்றும் கட்டார் பிரதிநிதிகள் ஹமாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காசா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் பேச்சுவார்த்தை கடந்த பல மாதங்களாக நீடித்து வரும் நிலையில் இதுவரை முன்னேற்றம் காண தவறியுள்ளது.

இந்நிலையில் முக்கிய பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் வடக்கு காசாவுக்கு மக்கள் திரும்புவது போன்ற சிக்கல் நிலவும் விடயங்களில் சமரசம்
எட்டப்பட்டிருப்பதாக எகிப்து தரப்பை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் இழுபறி நீடிக்கு முக்கிய விடயங்களில் சமரசம் எட்டப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக காசாவின் எகிப்து எல்லையான பிலடெல் பியா தாழ்வாரத்தில் இஸ்ரேல்
தனது கட்டுப்பாட்டை தக்கவைக்க முயன்று வருகிறது.

முன்னர் இணங்கிய விடயங்களில் இருந்து இஸ்ரேல் பின்வாங்குவதாக ஹமாஸ் குற்றம்சாட்டி இருப்பதோடு இஸ்ரேல் அதனை மறுத்துள்ளது.

அமெரிக்கா நல்லெண்ணத்துடன் மத்தியஸ்தத்தில் ஈடுபடவில்லை என்றும் அந்த
அமைப்பு குற்றம் சாட்டுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )